பூரி: ஒடிசாவில் பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5,000 கோழிகள் அழிக்கப்பட்டன. ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள பிபிலி பகுதியில் கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும் கோழிகளில் சில கோழிகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் மர்மமான முறையில் கோழிகள் இறந்தன. அதன் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், அந்த கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அப்பகுதியில் செயல்பட்ட கோழிப்பண்ணைகளில் இருந்த 5,000க்கும் மேற்பட்ட கோழிகள் கொல்லப்பட்டன.
மாநில அரசின் கால்நடை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சோதனையிட்டு வருகின்றனர். மொத்தம் 20,000 கோழிகளை கொல்ல திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து மாநில நோய் கட்டுப்பாட்டு கூடுதல் இயக்குநர் ஜெகநாத் நந்தா கூறுகையில், ‘பிபிலியில் மொத்தம் 20,000 கோழிகள் கொல்லப்படும்.
சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணையின் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் அனைத்து கோழிகளும் கொல்லப்படும். கோழிகளுக்கு பறவை காய்ச்சல் பரவி உள்ளதால், வாத்துகள் மற்றும் வான்கோழிகள் போன்ற பறவைகளும் பறவைக் காய்ச்சல் வைரஸால் பாதிக்கப்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்றார்.