புரி: ஒடிசாவில் படகு கவிழ்ந்த விபத்தில் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் சகோதரர், அவரது மனைவி ஆகியோர் உயிர் தப்பினர்.முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலியின் அண்ணன் ஸ்னேகஷிஷ் கங்குலி,அவரது மனைவி அர்பிதா ஆகியோர் கடந்த சனிக்கிழமையன்று ஒடிசா மாநிலம் புரிக்கு சுற்றுலா சென்றனர். புரியில் கடல் சார் விளையாட்டு மையத்துக்கு சென்ற அவர்கள் அதிவேக படகில் பயணம் செய்தனர். அப்போது படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து உயிர் காக்கும் படையினர் விரைந்து வந்து அவர்களை காப்பாற்றினர்.
ஸ்னேகஷிஷின் மனைவி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், நாங்கள் படகில் சென்ற போது ராட்சத கடல் அலைகள் எழும்பி கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதையடுத்து நான், எனது கணவர் உள்ளிட்ட படகில் இருந்தவர்கள் அனைவரும் தண்ணீரில் விழுந்தோம். அதிர்ஷ்டவசமாக உயிர் காக்கும் வீரர்கள் துரிதமாக செயல்பாட்டு எங்களை காப்பாற்றினர். கொல்கத்தா சென்ற பிறகு மாவட்ட எஸ்பி மற்றும் ஒடிசா முதல்வருக்கு கடிதம் எழுதுவேன் என தெரிவித்தார்.