துபாய்: ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில், இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்ட தரவரிசை பட்டியலில் ரோகித் 765 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 2வது இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இலங்கையுடன் நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா தோல்வியை சந்தித்தாலும், தொடக்க வீரராகக் களமிறங்கிய ரோகித் சிறப்பாக விளையாடி கணிசமாக ரன் குவித்தது குறிப்பிடத்தக்கது.
அவர் 3 போட்டியில் 157 ரன் (58, 64, 35 சராசரி: 52.33) விளாசி இருந்தார். இந்திய வீரர்கள் ஷுப்மன் கில் (763), விராத் கோஹ்லி (746) முறையே 3வது மற்றும் 4வது இடத்தில் உள்ளனர். பாகிஸ்தானின் பாபர் ஆஸம் (824) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் கேஷவ் மகராஜ் (716, தென் ஆப்.), ஜோஷ் ஹேசல்வுட் (688, ஆஸி.), ஆடம் ஸம்பா (686, ஆஸி.), குல்தீப் யாதவ் (665, இந்தியா), பெர்னார்ட் ஷோல்ட்ஸ் (657, நமீபியா) டாப் 5ல் உள்ளனர்.