டெல்லி: காவிரி நீர் ஒழுங்காற்று குழு அக்டோபர் 30ம் தேதி நடைபெறவுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டத்துக்கு அதன் தலைவர் வினீத் குப்தா அழைப்பு விடுத்துள்ளார். காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 13ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அக்டோபர் 15 முதல் 30ம் தேதி வரை 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு கர்நாடகா வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டது.
கடந்த 16ம் தேதி முதல் விநாடிக்கு 3,000 கன அடி நீரை கர்நாடகா திறந்திருக்க வேண்டும். இந்நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்று குழு அக்டோபர் 30ம் தேதி கூடுகிறது. அக்.30ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் நவம்பர் மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய நீரின் அளவு குறித்து பரிந்துரை செய்யப்பட உள்ளது. மேலும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட தண்ணீரை கர்நாடகா தமிழகத்திற்கு திறந்துவிடுகிறதா? என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளது. தமிழக அரசை பொறுத்தவரை ஏற்கனவே நிலுவையில் இருக்கக்கூடிய நீரை விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.