திருவொற்றியூர். சென்னை சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஹேமந்த் (19), தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் தனது நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து, எண்ணூர், சின்ன குப்பம் கடற்கரையில் குளித்த போது, ராட்சத அலையில் சிக்கிய ஹேமந்த், கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். அவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று ஹேமந்த் உயிரிழந்த நிலையில், அவரது உடல் அதே பகுதியில் கரை ஒதுங்கியது. போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர். சிறுவன் படுகாயம்: தண்டையார்பேட்டை தங்கசாலை பிரிட்ஜ் அருகே அதே பகுதியை சேர்ந்த 3ம் வகுப்பு படிக்கும் சிறுவன் காற்றாடி விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது, காற்றாடி தண்டையார்பேட்டை ரயில்வே யார்டு உயரழுத்த மின் கம்பியில் சிக்கியது.
அப்போது, பழைய வண்ணாரப்பேட்டை சிமென்ட்ரி சாலை பி.பிளாக் பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் (11), அருகில் இருந்த வீட்டின் கூரை மீது ஏறி இரும்பு கம்பியால் காற்றாடியை எடுக்க முயன்றபோது, மின் கம்பியில் உரசியதால், மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்தான். அவனுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.