Saturday, July 19, 2025
Home மருத்துவம்ஆரோக்கிய வாழ்வு தொழில்சார் பிசியோதெரப்பி!

தொழில்சார் பிசியோதெரப்பி!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

வலியை வெல்வோம்

இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி

கோவை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகள் தொழிற்சாலை நிறைந்த பகுதியாதலால் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இங்குள்ள பெரிய மருத்துவமனைகளில் தொழிற்சாலை விபத்துக்களால் சிகிச்சை எடுத்துக்கொள்ள வருபவர்களை அதிகமாகப் பார்த்ததுண்டு.

கட்டட வேலை செய்யும்போது மேலிருந்து கீழே விழுந்ததால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள், ஆலை இயந்திரங்களால் கை, கால் போன்ற உறுப்புகளை இழந்தவர்கள் எனப் பல மாதங்கள் தொடர் சிகிச்சை பெற வந்தவர்களை பார்க்கும்போது அந்த வயதில் அவர்கள் மேல் ஒரு பச்சாதாபம் வரும். இதற்கு பிறகு இவர்கள் எப்படி பணி செய்து பிழைப்பார்கள் என்ற எண்ணத்தோடு, மருத்துவர்கள், சீனியர் தெரபிஸ்டுகள் சிகிச்சை அளிப்பதை பார்த்து குறிப்பெடுத்து விட்டு கல்லூரிக்கு திரும்பி விடுவோம்.

படித்து முடித்த பின்பு தொடர் பயிற்சியின் போதுதான் தொழில்சார் சிகிச்சை முறைகள் மற்றும் எர்கோனாமிக்ஸ் பற்றிய முழு புரிதல் உண்டானது. இது எவ்வாறு அவர்களின் வாழ்வை மேம்படுத்த உதவும் என்பதையும் அறிந்து கொண்டேன்.இதற்கு முன்பு சில கட்டுரைகளில் வேலை சார்ந்து வரும் நோய்களை பற்றி பார்த்து உள்ளோம். உதாரணமாக கம்யூட்டர் பயன்படுத்துவர்களுக்கு வரும் கழுத்து வலி, கார்பல்டனல் சின்ட்ரோம், டென்னிஸ் எல்போ போன்ற உபாதைகள்.

முறையான தொழில்சார் சிகிச்சை முறை மற்றும் எர்கோகனாமிக்ஸ் போன்றவை தொழில் நிறுவனங்களில் எப்படி முறையாகச் செயல்படுகிறது என்பதைப்பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம். தொழில்சார் சிகிச்சை (Industrial Therapy) என்பது பணியிடத்தில் ஏற்படும் உடல் மற்றும் மன பாதிப்புகளைத் தடுப்பது, மதிப்பிடுவது மற்றும் மறுவாழ்வு செய்வதற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த மருத்துவ அணுகுமுறையாகும்.

இது தொழிலாளர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், பணியிட காயங்களுக்குப் பிறகு அவர்களை வேலைக்குத் திரும்ப உதவுவதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. இது தொழிலாளர்களின் உடல் திறனை வேலை மற்றும் அதன் தேவைகளுக்கு ஏற்ப மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டது. பணியிடத்தில் ஏற்படும் காயங்கள், அதாவது முதுகுவலி, சயாட்டிகா, தசைப்பிடிப்பு காயங்கள் (repetitive strain injuries), மற்றும் கார்பல் டன்னல் சிண்ட்ரோம் போன்ற, உடல் உபாதைகள் உற்பத்தித்திறன் பாதிக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர்.

தொழில்சார் சிகிச்சை இந்தப் பிரச்சனைகளைத் தடுப்பதற்கும், சிகிச்சையளிப்பதற்கும், மறு-காயங்களைத் தவிர்ப்பதற்கும் உதவுகிறது.

தொழில்சார் சிகிச்சையின் முக்கிய அம்சங்கள்:
தடுப்பு (Prevention):

பணியிட காயங்களைத் தவிர்க்க எர்கோனாமிக்ஸ் (ergonomics) மற்றும் சரியான உடல் இயக்கவியல் (body mechanics) முக்கியமாகக் கருதப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, கனரக பொருட்களை தூக்கும் முறைகளை மேம்படுத்துதல் மற்றும் பணியிட உபகரணங்களை சரியாக அமைத்தல்.

மதிப்பீடு (Assessment):

செயல்பாட்டு திறன் மதிப்பீடு (Functional Capacity Assessment – FCA): தொழிலாளர்களின் உடல் திறனை (வலிமை, நெகிழ்வு, பொறுமை) அவர்களின் வேலை தேவைகளுடன் ஒப்பிடுதல்.

பாதிப்பு மதிப்பீடு (Impairment Ratings):

காயத்தின் தீவிரத்தை மதிப்பிடுதல் மற்றும் நீண்ட கால தாக்கத்தை ஆய்வு செய்தல்.

சிகிச்சை மற்றும் மறுவாழ்வு (Therapeutic Rehabilitation):

பிசியோதெரபி முறைகள், அதாவது வலுப்படுத்தும் பயிற்சிகள் (strengthening exercises), நீட்சி (stretching), மற்றும் மென்மையான திசு மசாஜ் (soft tissue mobilization) பயன்படுத்தப்படுகின்றன.

வேலை உருவகப்படுத்துதல் (Job Simulation):

தொழிலாளர்களை உண்மையான வேலைச் சூழலுக்கு ஒத்த பயிற்சிகளுக்கு உட்படுத்துதல், இதன் மூலம் அவர்களை பணிக்குச் செல்ல தயார்படுத்தலாம்.

பொருளாதார மற்றும் சட்ட அம்சங்கள்:

தொழில்சார் சிகிச்சை திட்டங்கள் செலவு-பயன் (cost-benefit) அடிப்படையில் வடிவமைக்கப்படுகின்றன, இவை இழப்பீட்டு செலவுகளை குறைக்கின்றது. பணியிட பாதுகாப்பு விதிமுறைகள் (OSHA guidelines) மற்றும் இழப்பீட்டு உரிமைகள் (workers’ compensation) முக்கிய பங்கு வகிக்கிறது.

பாதுகாப்பு மற்றும் மறு-காயம் தடுப்பு:

தொழிலாளர்களைப் பாதுகாப்பாக பணிக்குத் திரும்ப உதவுவதுடன், மறு-காயங்களைத் தடுக்க எர்கோனாமிக் மாற்றங்கள் மற்றும் பயிற்சி வழங்கப்படும்.

தொழில்சார் சிகிச்சையானது ஒற்றை மருத்துவரை மட்டும் சார்ந்தது அல்ல. முதன்மை குழுவாக பிஸிசியன், பிசியோதெரபிஸ்ட், ஆக்யூபேசனல்தெரபிஸ்ட், சைக்காலஜிஸ்ட், எர்கோனாமிஸ்ட், வேக்கசனல் கன்சல்டன்ட் (vocational rehab consultant), சமூகப்பணியாளர் (social worker) செவிலியர் (rehabilitation nurse) ஆகியோர் இணைந்து செயல்படுகின்றனர். அவர்களது பணிகள் கீழ்கண்டவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

1. பிசியோதெரபிஸ்ட்கள் (Physiotherapists):

பணியிட காயங்களுக்கு (முதுகுவலி, சயாட்டிகா, தசைப்பிடிப்பு காயங்களுக்கு சிகிச்சையளித்து, மைய தசை பயிற்சிகள், நரம்பு இயக்கவியல்
பயிற்சிகளை கற்பிக்கின்றனர்.

2.தொழில்சார் சிகிச்சையாளர்கள் (Occupational Therapists):

தொழிலாளர்களின் செயல்பாட்டு திறனை மீட்டெடுத்தல் மற்றும் வேலை திறன்களை மேம்படுத்துதல். வேலை உருவகப்படுத்துதல் மற்றும் பணி
மாற்றியமைப்பு.

3.தொழில்சார் மருத்துவர்கள் (Occupational Physicians):

மருத்துவ மதிப்பீடு மற்றும் சிகிச்சை திட்டங்களை ஒருங்கிணைத்தல். காயத்தின் தீவிரத்தை மதிப்பிடுதல் மற்றும் மருந்து பரிந்துரைத்தல்.

4.எர்கோனாமிக்ஸ் நிபுணர்கள் (Ergonomists):

பணியிட வடிவமைப்பை மேம்படுத்துதல்.

மேசை, நாற்காலி, மற்றும் உபகரண அமைப்புகளை சரிசெய்தல்.

5.உளவியல் நிபுணர்கள் (Psychologists):

பணியிட காயங்களால் ஏற்படும் மன அழுத்தத்தை கையாளுதல். மன ஆரோக்கிய ஆலோசனை மற்றும் மன அழுத்த மேலாண்மை.

6.பணியிட மேலாளர்கள்/மனிதவள நிபுணர்கள்:

இழப்பீட்டு உரிமைகளை கையாளுதல் மற்றும் பணி மாற்றியமைப்பு. குறைந்த அழுத்த பணிகளை ஒருங்கிணைத்தல்.

பிசியோதெரபி மற்றும் எர்கோனாமிக் ஆலோசனை:

தொழில்துறை பிசியோதெரபி என்பது பல ஆதார அடிப்படையிலான செயல்பாட்டு மதிப்பீடுகள் மற்றும் சிகிச்சை சேவைகளை உள்ளடக்கியது, இது பணியிடக் காயங்களைக் குறைப்பதற்கு உதவுவதோடு, ஒரு ஊழியரின் பணியிட செயல்பாடுகளைச் செய்யும் திறனை மதிப்பிடுவது, பணியிட நடவடிக்கைகளை மதிப்பிடுவது மற்றும் ஒரு தனிநபரின் அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளின் திறனை மதிப்பிடுவது ஆகியவற்றை உள்ளடக்கியது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi