*பகவதியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
கன்னியாகுமரி : கன்னியாகுமரி, குழித்துறையில் ஆடி அமாவாசையையொட்டி ஏராளமானோர் பலிதர்ப்பணம் செய்தனர். கன்னியாகுமரி கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி பலிகர்ம பூஜைகள் செய்தனர். பகவதி அம்மன் கோயிலில் ஆடி அமாவாசை சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆடி அமாவாசையையொட்டி தங்கள் முன்னோருக்கு பலி தர்ப்பணம் செய்ய நேற்று அதிகாலை முதலே ஏராளமான வாகனங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கன்னியாகுமரியில் குவிந்தனர். அவர்கள் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் புனித நீராடி கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்களிடம் தங்கள் முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜைகள் செய்தனர்.
பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் ஆகியவற்றை வாழை இலையில் வைத்து தலையில் சுமந்து சென்று கடலில் போட்டு விட்டு நீராடினர். பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோயில், பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தனர். திரிவேணி சங்கமம் படித்துறை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் நீராடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
ஆடி அமாவாசையை ஒட்டி கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாகனங்களை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசாரும் பல்வேறு ஏற்பாடுகளை செய்தனர். கன்னியாகுமரியில் குவிந்த பக்தர்களால் அதிகாலை முதலே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கூட்டத்தில் உறவினர்களை மற்றும் உடைமைகளை தவற விட்டவர்கள் குறித்து கடற்கரையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் இருந்து ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு ஆடி அமாவாசை சிறப்பு பூஜைகள் நடந்தன.மார்த்தாண்டம்: குழித்துறை தாமிரபரணி ஆற்றங்கரையோரம் நேற்று 2வது நாளாக தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக திற்பரப்பு மகாதேவர் கோயில் அருகே ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
அதிகாலையிலேயே ஏராளமானோர் வந்து இருந்தனர். அவர்கள் புரோகிதர்கள், வேத மந்திரம் ஓதுவார்களிடம் முன்னோரை நினைத்து பலிகர்ம பூஜை செய்தனர். பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள், தர்ப்பை புல் ஆகியவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்து சென்று குழித்துறை தாமிரபரணி ஆற்றில் போட்டுவிட்டு புனித நீராடினர். இதையடுத்து குழித்துறை மகாதேவர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
திங்கள்சந்தை: வில்லுக்குறி மாம்பழத்துறையாறு அணை அருகே உள்ள தூவலாறு, இரணியலில் வள்ளி ஆற்றின் கரையில் அமைந்துள்ள செல்வராஜ கணபதி கோயில் முன் விரதம் இருந்து ஆற்றில் நீராடிய பக்தர்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து தானங்கள் செய்து தர்ப்பணம் செய்தனர். இதனால் இரணியல் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அதிகாலையில் இருந்தே மக்கள் பெரியவர்கள் சிறியவர்கள் என குடும்பத்துடன் பரபரப்பாக இயங்கினர்.