கும்மிடிப்பூண்டி: ஓசியில் காய்கறி தராததால் கடைக்குள் புகுந்து ஊழியரை வெட்டியவர் கைது செய்யப்பட்டார். கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (36). இவர் கன்னியம்மன் கோயில் மேம்பாலத்தின் கீழ் காய்கறிக் கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் அதே கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் (22) என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் வெட்டுக்காலனி பகுதியைச் சேர்ந்த விஜி, பார்த்தா உள்ளிட்ட 4 பேர் கடைக்குள் வந்து பணம் கொடுக்காமல் காய்கறி தருமாறு கேட்டுள்ளனர்.
அதற்கு மறுத்த இளவரசனை மிரட்டினர். இதுகுறித்து கடை உரிமையாளர் ரவி கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில் நேற்று இரவு மீண்டும் விஜி, பார்த்தா ஆகிய இருவரும் காய்கறி கடைக்குள் புகுந்து இளவரசனை வயிற்றில் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதனையடுத்து போலீசார் விஜியை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கத்திக்குத்து பட்ட இளவரசனை கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றினர்.