சென்னை: ஓசி பஸ்சில் சென்னை தப்பி வந்த தேவநாதன், இன்று பொதுமக்களிடம் இருந்து ரூ.525 கோடியை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இடைப்பட்ட காலத்தில் அவர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நிதி மோசடி வழக்கில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவரும், பாஜ ஆதரவாளருமான தேவநாதன் யாதவ் கைது செய்யப்பட்டு உள்ளார். 525 கோடி வரை மோசடி நடைபெற்றதாக ஏராளமானோர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் எடுத்து உள்ளனர்.
தனியார் டிவி தொலைக்காட்சி உரிமையாளரும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவராகவும் உள்ள தேவநாதன் யாதவ், சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் ‘தி மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி லிமிடெட்’ என நிதி நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். 1872ஆம் ஆண்டு முதல் இந்த நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகையை கட்டி, உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.
ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிக அளவில் இந்த நிறுவனத்தை நம்பி, முதலீடு செய்தனர். இந்த நிறுவனத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் இருந்து நிதியை பெற்று சுமார் 50 கோடி வரை நிதி மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது. மேலும், 525 கோடி ரூபாய் வரையிலான வைப்பு தொகையை திரும்ப தர நிதி நிறுவனம் மறுப்பதாக முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டினர்.
நிதி நிறுவனம் அளித்த 150 காசோலைகள் பணம் இல்லாமல் திரும்ப வந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர். இது தொடர்பாக தேர்தல் நேரத்திலேயே தேவநாதன் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியது. இந்த மோசடி தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 6ம் தேதி அந்த நிறுவனத்திற்கு முன்பாக 50க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டம் நடத்தினர்.
அதைத் தொடர்ந்துதான் தேவநாதன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், திருச்சியில் பதுங்கி இருந்த தேவநாதனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த மோசடி குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிட்டார். இதில் 4 லட்சத்து 27 ஆயிரத்து 677 வாக்குகள் பெற்ற காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் வெற்றி பெற்றார்.
2 லட்சத்து 22 ஆயிரத்து 13 வாக்குகளை பெற்ற அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் இரண்டாம் இடமும், ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 788 வாக்குகள் பெற்ற தேவநாதன் யாதவ் மூன்றாம் இடமும் பிடித்து இருந்தனர். தேர்தல் பிரச்சார காலத்தில் நிதி மோசடி புகார் எழுந்து பெரும் சர்ச்சையான நிலையில் சிவகங்கை தொகுதியில் பிரச்சாரம் செய்ய இருந்த ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கடைசிநேரத்தில் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்தார். இதுபோன்ற மோசடி பேர்வழிக்கு சீட் கொடுத்துவிட்டோமோ என்ற கடைசிநேர அச்சத்தில் இவரது பிரச்சாரத்திற்கு பாஜ தலைவர் அண்ணாமலை உள்பட யாருமே போகாமல் தவிர்த்து விட்டதாக கூறப்பட்டது.
தனியார் டிவி நடத்தும் தேவநாதன், பணக்காரராக ஆனதற்கு பல கதைகள் உள்ளன. இவர் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். காசு, பணம் இல்லாததால் ஓசி பஸ் ஏறி சென்னைக்கு ஓடிவந்தவர் என்று கூறப்படுகிறது. அதிமுகவில் சேர பல்வேறு முயற்சிகள் செய்தும் இவரை அந்தக்காலத்தில் ஜெயலலிதா சீண்டவேயில்லை. பிறகு பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து, கன்சிராம் மறைவுக்குப் பிறகு மாயாவதியிடம் பல கோடி ரூபாயை ஆட்டையப் போட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதெரிந்து ஆத்திரமடைந்த மாயாவதி, இவரை தில்லிக்கு அழைத்து பலமாக கவனித்து அனுப்பினார்.
உத்தரப்பிரதேசத்தில் இருந்து தப்பி வந்த தேவநாதன், மாயாவதியிடம் இருந்து அபேஸ் செய்த பல கோடி ரூபாயை முதலீடாக கொண்டு, தமிழ்நாட்டில் நிறுவனத்தை தொடங்கி வசூல்வேட்டையில் ஈடுபட்டார். பிறகு தான் நடத்தி வந்த நிறுவனத்திற்கும் நஷ்ட கணக்கை காட்டி, திவால் நோட்டீஸ் வழங்கி, அப்போதும் பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வந்தார். மெல்ல, சாதியை கையில் எடுத்து கட்சியை தொடங்கினார். அந்தக் கட்சியும் போணியாகவில்லை. தற்போது பாஜ ஆதரவாளராக மாறி, பல கோடி சுருட்டலில் ஈடுபட்டு சாதனை படைத்துள்ளார்.
தற்போது நிதி நிறுவனம் மூலம் இவரிடம் பல கோடிக்கணக்கான பணத்தை இழந்த பல ஓய்வூதியர்கள், இவருக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். தன்னை சிறந்த ஆன்மிகவாதியாக காட்டிக் கொண்டு மோசடிகள் பல செய்து வரும் இவர், போலி ஆன்மிகவாதி மட்டுமல்ல, மோசடியிலும் கைதேர்ந்தவர் என்றும், பலே கில்லாடி என்றும் நிதி நிறுவன பணியாளர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.
மேலும் சர்ச்சைக்குள்ளான இந்த பழைமையான நிதி நிறுவனம், தற்போது மயிலாப்பூரில் பூட்டப்பட்டு கிடக்கிறது. தேவநாதன் தலைமறைவு குற்றவாளியாக தேடப்படுகிறார் எனத் தெரிந்து, நிதி நிறுவன ஊழியர்களும், தொலைக்காட்சி ஊழியர்களும் வேலையில் இருந்து நின்று தப்பியுள்ளனர்.
* பினாமிகள் பெயரில் அரங்கேறிய மோசடி
தேவநாதன் யாதவை பொறுத்தவரை, பல மோசடிகளில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள பல ஆண்டுகளாக தொலைக்காட்சியை பாதுகாப்பு கவசமாக நடத்தி வருகிறார். மேலும் மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் இருந்து ஆட்டையப்போட்ட பணத்தில் இருந்து தி.நகரில் விலை உயர்ந்த பங்களாவை கட்டி உள்ளார். சென்னையில் அதிக விலைபோகும் தி.நகரில், சொகுசு பங்களாவை கட்டி அதில் ஏராளமான வெளிநாட்டு கார்களை நிறுத்தி வைத்துள்ளார்.
மேலும் தனது டிவியில் வேலை செய்யும் ஊழியர்களை பயன்படுத்திக் கொண்டு சுமார் 30க்கும் மேற்பட்ட தொழில்களை பினாமி பெயரில் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கியது மட்டுமல்லாமல் புறம்போக்கு நிலங்களையும் கணக்கில்லாமல் வளைத்துப் போட்டுள்ளதாக அரசியல் கட்சிகளின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.