நன்றி குங்குமம் ஆன்மிகம்
முத்துக்கள் முப்பது
எஸ். கோகுலாச்சாரி
தடைகளை நீக்கும் கணபதி பூஜையை மகிழ்வோடு கொண்டாடுவோம்!
1. காணாபத்யம்
பொதுவாக இந்து சமயத்தின் தெய்வ வழிபாடுகளை ஆறு விதமாகப் பிரித்து அறு சமய நிர்ணயம் (ஷண்மதம்) செய்திருக்கின்றார்கள். சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட சைவம், திருமாலை முழுமுதற்கடவுளாகக் கொண்ட வைணவம், முருகனை முழுமுதல் கடவுளாகக் கொண்ட கௌமாரம், சக்தியை முழு முதற்கடவுளாகக் கொண்ட சாக்தம், விநாயகரை முழு முதற் கடவுளாகக் கொண்ட காணாபத்யம், சூரியனை முழுமுதல் கடவுளாகக் கொண்ட சௌரம் என்று இந்த ஆறு பிரிவுகளைச் சொல்லுவார்கள்.
இதில் காணாபத்யம் என்கின்ற சமயம் முழுக்க முழுக்க விநாயகரையும் அவருடைய பிரதாபங்களையும் பேசி, அவரை ஏக தெய்வமாக வழிபடுகின்ற ஒரு மரபு. விநாயகரின் பெருமைகளை (அவரே முதல் கடவுள் என்ற கொள்கையை) விநாயகபுராணம், முத்கலப்புராணம், ஹேரம்ப உபநிஷதம், கணபதி உபநிஷதம் முதலான நூல்கள் வலியுறுத்தி கூறுகின்றன.
2. எத்தனை திருநாமங்கள்?
காணாபத்யம் கணபதிக்குரிய தனி வழிபாடாக இருந்தது என்றாலும்கூட இன்றைக்கு அது சைவ சமயத்தில் ஒரு பிரிவாகவே இருக்கிறது. விநாயகர் வழிபாடு என்பது இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் இருந்தாலும், பிரத்தியேகமாக தென்னிந்தியாவிலும் நேபாளத்திலும் மிக அதிகமாக இருக்கிறது. விநாயகர் என்றாலே எல்லா தெய்வங்களுக்கும் முதன்மையானவர், வெற்றியைத் தரும் நாயகர் என்று பொருள். (வி=இல்லை; நாயகன்=தலைவன்: தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லாதவன். தனி முதல்வன்) கணங்களுக்கு தலைவராக இருப்பதால் கணபதி என்றும், யானை முகம் கொண்டிருப்பதால் கஜமுகன் என்றும்,
சிவபெருமானுக்கும் உமையம்மைக்கும் பிள்ளை அதுவும் தலைப் பிள்ளை என்பதாலும், பிள்ளையைப் போல எளிமையான வழிபாட்டுக்குரிய தெய்வம் என்பதாலும் பிள்ளையார். விநாயகர், தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் `பிள்ளை’ என்ற பெயருடன் `ஆர்’ என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றார். தடைகளை எல்லாம் பொடிப் பொடி ஆக்குவதால் விக்னேஸ்வரன் என்றும், கணேசன், சர்வாயுதர், மயூரேசர், கபிலர், விகடர், என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறார்.
3. நான்கு யுகங்களிலும் பிள்ளையார்
‘கணேச புராணம்’, கிருத, திரேதா, துவாபர, கலி ஆகிய நான்கு யுகங்களிலும் நான்கு அவதாரங்களாக அவதரிப்பதாகக் கூறுகின்றது.
1. கிருதயுகம்
காஸ்யப முனிவருக்கும் அதிதி தேவிக்கும் பிள்ளையாக அவதரித்து, அசுரர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டினார். கிருதயுக அவதாரத்தில் பிள்ளையாரின் திருநாமம் மகாகடர்.
2. திரேதாயுகம்
அம்பிகை பார்வதியின் பிள்ளையாக அவதரித்து, அழகான மிகப் பெரிய மயிலை தம் குழந்தைப் பருவத்தில் பிடித்து விளையாடியதால், மயூரேசர் என்ற திருநாமம்.
3. துவாபரயுகம்
கஜானனன் என்ற திருநாமத்துடன் அவதரித்து, பராசர மகரிஷி மற்றும் பராசர மகரிஷியின் தேவி வத்ஸலாவால் சிறப்பாக வளர்க்கப்பட்டார்.
4. கலியுகம்
சிவபெருமானுக்கும் அம்பிகை பார்வதி தேவிக்கும் குழந்தையாக அவதரித்து தடங்கல்களையும் தர்மநெறியில் இருப்போரின் இன்னல்களைப் போக்கியும் வருகிறார்.
4. கஜாசுரன் தவம்
விநாயகர் அவதாரம் பற்றிப் பல்வேறு கதைகள் இருக்கின்றன. சிவமகாபுராணத்தில் உள்ள கதை பரவலாக அறியப்படுகிறது. முற்காலத்தில், யானை முகம் கொண்ட கஜாசுரன் என்ற அசுரன் இருந்தான். அவன் சிவபெருமானை நோக்கிப் பல வருடங்களாகக் கடுந்தவம் புரிந்தான். அவனது தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான், அவனுக்குக் காட்சியளித்து, “வேண்டிய வரம் கேள்” என்றார். அதற்குக் கஜாசுரன், தன் வயிற்றில் சிவபெருமான் லிங்க வடிவில் தங்கியிருக்க வேண்டும் என்று வரம் கேட்டுப் பெற்றான். இதை அறிந்து கலக்கமடைந்த பார்வதிதேவி, மகாவிஷ்ணுவிடம் உதவி கோரினார்.
பிறகு விஷ்ணு மற்றும் நந்தி ஆகிய இருவரும் தெருக்கூத்து நடத்துபவர்கள் போன்ற உருவம் கொண்டு கஜாசுரனின் அரண்மனைக்கு வந்தனர். நந்தியின் நடனத்தைக் கண்டு மகிழ்ந்த கஜாசுரன், அவர் வேண்டுவதை அளிப்பதாக வாக்களிக்கிறான். அதற்கு நந்தி அவனிடம், வயிற்றில் உள்ள சிவபெருமானை விடுவிக்குமாறு கேட்கிறார்.
5 சிவன் தந்த வரம்
கஜாசுரனும், தான் கொடுத்த வாக்கின்படி வயிற்றில் உள்ள சிவபெருமானை விடுவித்தான். அவன் சிவபெருமானை நோக்கி என்றென்றும் தன் நினைவு என்றும் அழியாமல் நிலைக்க வரம் வேண்டும் என்று வேண்டுகிறான். அதை ஏற்றுக் கொண்ட சிவபெருமான், கஜாசுரனின் யானைத் தலையைக் கொய்து அவரைப் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சியில் இருந்து விடுவிக்கிறார். மேலும், அவனது யானைத் தோலை உடுத்திக் கொண்டு கஜசம்ஹார மூர்த்தியாகக் காட்சியளித்தார்.
பிறகு சிவபெருமான் தன் வாகனமான நந்தியில் அமர்ந்து கொண்டு கயிலாயம் வருகிறார். சிவபெருமான் கயிலாயம் வந்து கொண்டிருப்பதை அறிந்து மகிழ்ந்தாள் பார்வதி தேவி. அவரை வரவேற்கத் தயாரானாள். கயிலாயத்தில் எங்கெங்கும் விழாக்கோலம். அப்போது நந்தி இல்லாததால் அங்கு வாயிற்காவலர் யாரும் இருக்கவில்லை.
6 தலையை கொய்த சிவபெருமான்
இப்போது மற்றொரு திருவிளையாடல் ஆரம்பமாகிறது. பார்வதிதேவி தாம் நீராடும் மஞ்சள் விழுதால் ஒரு சிறுவனைச் செய்து அதற்கு உயிர் கொடுத்தார். அவனுக்கு `விக்னங்களைத் தீர்ப்பவன்’ என்ற பொருளில் விநாயகர் என்ற பெயரும் சூட்டினார். தான் நீராடி வரும் வரை ஒருவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என்று விநாயகரிடம் அறிவுறுத்துகிறார், பார்வதி. விநாயகரும் அவ்வாறே செய்வதாக வாக்களிக்கிறார். அப்போது கயிலாயம் வந்தடைந்த சிவபெருமானை தடுத்து நிறுத்துகிறார். அவரை விநாயகர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவபெருமான் தன் திரிசூலத்தால் விநாயகரின் தலையைக் கொய்தார்.
7. பார்வதியின் கோபம்
பிறகு நடந்ததை அறிந்து கோபம் கொண்ட பார்வதி, புத்திர சோகத்தால் அண்டசராசரங்களை அழிக்க முடிவெடுத்தார். எல்லா தேவர்களும் பதறி அடித்துக் கொண்டு ஓடினர். ‘‘அம்மா, அவ்வாறு செய்ய வேண்டாம்” என்று பிரம்மதேவர் முதலிய தேவர்கள் வேண்டிக் கொண்டனர். அதற்குப் பார்வதி, விநாயகரை உயிர்த்தெழச் செய்ய வேண்டும் மற்றும் விநாயகரையே அனைவரும் முழுமுதற் கடவுளாக வணங்க வேண்டும் என்று இரு நிபந்தனைகள் விதித்தார்.
அதை ஏற்றுக் கொண்ட சிவபெருமான், வடக்கில் தலை வைத்து (பொதுவாக வடக்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது) இறந்த நிலையில் படுத்திருக்கும் முதலில் தென்படும் உயிரினத்தின் தலையைக் கொய்து எடுத்து வருமாறு சிவகணங்களை அனுப்பினார். அதன்படி சிவகணங்கள் கஜாசுரனின் தலையுடன் திரும்பி வந்தனர். அதை விநாயகரின் உடலோடு பொருத்தினார் பிரம்மதேவர். பிறகு விநாயகருக்கு உயிரளித்த சிவபெருமான், முழுமுதற்கடவுள் என்ற பட்டமும் கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி என்றும் திருநாமத்தையும் வழங்கினார்.
8. வெற்றிக்கு வழிகாட்டும் பூஜை
வேதங்களின் சுருக்கம் “ஓம்” எனும் பிரணவம். அந்த பிரணவத்தின் குறியீடுதான் விநாயகரின் திருவுருவம். அவர் திருமுகம் பாருங்கள். தலை பெரிதாக இருக்க, கீழே வலஞ்சுழியாக துதிக்கை இருக்க, பிரணவ ஸ்வரூபம் அப்படியே பிரதிபலிக்கும். அவரே ஆதார மூர்த்தி என்பதால் மூலாதார மூர்த்தி என்று அழைக்கின்றனர். பிள்ளையாருக்கென்று தனி பூஜை உண்டு என்றாலும்கூட, மற்ற தேவதைகளுக்கான பூஜையாக இருந்தாலும் சரி, உலகியல் ரீதியான வைதீக பூஜைகளாக இருந்தாலும் சரி, எந்தப் பூஜையிலும் முதன்மையாக பிள்ளையார் பூஜை எனப்படும் ஆராதனை செய்துவிட்டுத் தான் ஆரம்பிக்க வேண்டும். விநாயகர் பூஜை என்பது தடைகளை நீக்கி வெற்றிக்கு வழிகாட்டும் பூஜை.
9. சுக்லாம் பரதரம்
பிள்ளையார் பூஜைக்கு “சுக்லாம் பரதரம்” என்ற ஸ்லோகத்தைச் சொல்லி பிள்ளையாரை ஆவாகனம் செய்து, மூல மந்திரத்தைச் சொல்லி வழிபடுவார்கள். வைணவத்திலும் இதே மந்திரம்தான். ஆனால், அடுத்த இரண்டு வரி மாறும். அவர்கள் விஸ்வக்சேன ஆராதனம் என்பார்கள். வைணவத்தில் கஜானனர் என்றொரு அமைப்பு உண்டு. `தும்பிக்கை ஆழ்வார்’ என்று பல தலங்களில் மாடங்களில் பிரதிஷ்டை செய்திருப்பார்கள். இனி சுக்லாம் பரதரம் மந்திரம் என்ன என்று பார்ப்போம்.
சுக்லாம் பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
சுக்லாம் பரதர – வெள்ளை வஸ்திரம் கட்டிக் கொண்டிருப்பவர்.
விஷ்ணு – என்றால் எல்லா இடத்திலும் நிறைந்திருப்பவர்.
சசிவர்ண – நிலா போன்ற நிறம் உடையவர்.
சதுர்புஜ – நான்கு கை கொண்டவர்.
ப்ரஸந்த வதந – மலர்ந்த முகம் உடையவர். அவரை தியானிப்போம் என்பது பொருள்.
10. விநாயகர் திருவடி,வயிறு, கரங்கள்
1. திருவடி
ஆன்மாவைப் பொருந்தி நின்று மல, கன்ம, மாயைகளைத் தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன.
2. பெருவயிறு
ஆகாசமானது எல்லாப் பொருள்களுக்கும் தன்னகத்து ஒடுங்கவும், உண்டாகவும் இடந்தந்து இருப்பது போலப் பெருவயிறாகிய ஆகாசமும் எல்லா உலகங்களும் உயிர்களும் தம்முள் அடங்கியிருக்கின்றன என்பதைக் குறிப்பிடுகின்றது.
3. ஐந்துகரங்கள்
பிள்ளையாரின் ஒரு கை பாசத்தை ஏந்தியுள்ளது. அது படைத்தலைக் குறிக்கிறது. எனவே, இவரே பிரம்மாவாகிறார். தந்தம் ஏந்திய கை காத்தலைக் குறிக்கிறது. எனவே இவரே மகாவிஷ்ணுவாகிறார் துதிக்கை அனுக்ரகம் செய்கிறது. அங்குசம் ஏந்திய கை அழித்தலைக் குறிக்கிறது. எனவே, இவர் ருத்ரர் ஆகிறார் மோதகம் ஏந்திய கை அருளைக் குறிக்கிறது. எனவே, இவரே சர்வ சக்தி படைத்த பரமேஸ்வரனாகவும் இருக்கிறார்.
11. விநாயகரின் கொம்புகள், செவி
1. கொம்புகள்
மகாபாரதத்தை எழுதுவதற்காகத் தமது கொம்பையே ஒடித்தது வெளித்தோற்றத்தைவிட அறிவுக்கு முன்னுரிமை தர வேண்டியதை உணர்த்துவதாகக் கூறப்படுகின்றது.
நீடாழி உலகத்து மறை நாலோடு ஐந்து என்று நிலை நிற்கவே
வாடாத தவ வாய்மை முனி ராசன் மாபாரதம் சொன்ன நாள்
ஏடாக வட மேரு வெற்பாக வங் கூர் எழுத்தாணி தன்
கோடாக எழுதும் பிரானைப் பணிந்து அன்பு கூர்வாம் அரோ.
2. தாழ்செவி
விநாயகரின் முறம் போன்ற பெரிய காதுகள் செவியில் விழும் செய்திகளைச் சலித்து நல்லவற்றை மட்டும் தேர்ந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கின்றன.
இன்னொரு விதமாகவும் அவருடைய திருஉருவ ரகசியத்தைச் சொல்லலாம், விலங்கு+பூத+மனித+தேவர் இவர்களின் கூட்டுத் தொகுப்பு விநாயகர். யானைத் தலையும், காதும், தும்பிக்கையும் விலங்கின் கூறு. பெரிய வயிறு குறுகிய கால்கள் பூதத்தின் கூறு. முகம் புருவ வடிவம் மனிதக்கூறு. நான்கு கரங்கள் தேவர் கூறு. ஒடிந்த கொம்பு சண்ட பிரசண்டர் என்பதையும் காலதண்டம் சகல விக்கினங்களையும் நாசம் செய்பவர் என்பதையும் குறிக்கிறது.
12. ஏன் குட்டிக் கொள்கிறோம்?
சுக்லாம் பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம் ப்ரஸந்த வதநம் என்று ஐந்து வார்த்தைகள் சொல்லி ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும். தலையில் குட்டிக் கொள்வதால் மருத்துவ நலன்கள் பெறலாம். மனித உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களான மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞேயம் மற்றும் சகஸ்ரம் என்பார்கள்.
இவற்றிற்கிடையே சுவாச நடப்பு நடக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே சிரசில் குட்டிக் கொள்வதால், ஸஹஸ்ரார கமலத்தில் உள்ள ஆனந்த அமுதம் நாடி நரம்பு வழியாக நம் சுவாசத்தோடு பாயும். அது நம் மூளையின் நரம்புகளைத் தூண்டி மிகத் தெளிவாகச் சிந்திக்க வைக்கும். நினைவுத் திறனை வளர்க்கும். ரத்த அழுத்தம் போன்ற ஆரோக்கியக் குறைவுகளை சீராக்கும். மொத்தத்தில் நல்வாழ்வு தரும்.
13. எளிமையான வழிபாடு
பிள்ளையார் இருப்பிடமோ, பூஜையோ, நிவேதனமோ எளிமையானது. உருவம்கூட வேண்டியதில்லை. மஞ்சளை அரைத்து ஒரு சிறு குழந்தைகூட பிடித்து வைத்தால் போதும், பிள்ளையார் தயார். பிள்ளையார் அவ்வடிவில் எழுந்தருளி அருள்புரிவார். சந்தனம், களி மண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்கக் கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடலாம். எளிதாக கிடைக்கக் கூடிய அறுகம்புல் மிக விருப்பம்.
காட்டில் கிடைக்கக் கூடிய எருக்கம் பூவை தலையில் சூடி கொள்வார். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும். கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்யலாம்.
14. நான்கு தந்து, மூன்று கேட்ட ஒளவையார்
“பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான்
தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!”
அதென்ன நான்கைக் கொடுத்து மூன்றைப் பெறுவது. என்று நினைப்போம். 45000 கொடுத்து 1 பவுன் காசு வாங்குவது போலத்தான். பால், தேன், பருப்பு எல்லாம் எங்கும் கிடைக்கக்கூடியது. ஆனால், தமிழ் அருந்தமிழ் அல்லவா. மூன்று சங்கங்களால் வளர்ந்த தமிழ் அல்லவா. விநாயகருக்கு மிகவும் பிடித்தது மோதகம்; இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் கண்டுவிடலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில், இது விநாயகருக்குப் படைக்கப்படுகிறது.
15. விநாயக சதுர்த்தியும் கிருஷ்ண ஜெயந்தியும்
பகவான் கிருஷ்ணனின் ஜெயந்தி உற்சவமான கோகுலாஷ்டமியும், பிள்ளையாரின் அவதார உற்சவமான விநாயகர் சதுர்த்தி உற்சவமும் ஆவணி மாதத்தில் அடுத்தடுத்து வருகிறது. கண்ணனும் பிள்ளையாரும் குழந்தைகளுக்குப் பிடித்தமான தெய்வங்கள். குழந்தையைப் பிரதிபலிக்கக் கூடிய தெய்வங்கள். பிள்ளையார் ஆனைமுகக் கடவுள். கண்ணன் நடந்து வருகின்ற அழகு ஒரு யானை நடப்பது போலவே இருக்கும் என்று பெரியாழ்வார் பாசுரம் பாடுகின்றார்.
தொடர் சங்கிலிகை சலார்-பிலார் என்னத்
தூங்கு பொன்மணி ஒலிப்பப்
படு மும்மதப் புனல் சோர வாரணம்
பைய நின்று ஊர்வது போல்
உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப
உடை மணி பறை கறங்க
தடந் தாளிணை கொண்டு சார்ங்கபாணி
தளர்நடை நடவானோ
16. கூத்தாடும் பிள்ளையாரும், குடமாடு கூத்தனும்
இருவருமே கூத்துக் கலையில் வல்லவர்கள். நர்த்தன கணபதி, கூத்தாடும் பிள்ளையார் என்று விநாயகர் பெருமானைச் சொல்கிறார்கள். கண்ணனை “குடமாடு கூத்தன்” என்று அழைப்பார்கள். இருவருமே தாய் தந்தையின் மீது மிகுந்த மதிப்பு உள்ளவர்கள். கண்ணன் நான்கு கரங்களோடு அவதாரம் செய்த பொழுது தேவகியும் வசுதேவரும், ‘‘நீ உன்னுடைய சங்கு சக்கரங்களை (அவதார ரகசியத்தை) மறைத்துக் கொள்ள வேண்டும்’’ என்று வேண்டிய போது, உடனடியாக தாய் தந்தையின் பேச்சு கேட்டு சாதாரண மனித பிள்ளையாக மாறியதாக பாகவதம் கூறும்.
பிள்ளையாரும் தாய் தந்தையர்களை சுற்றி வந்தால், இந்த உலகத்தையே சுற்றியது போல என்பதை செயலில் காட்டியவர். இருவர் படையலிலும் பொதுவான சில விஷயங்கள் உண்டு. ‘‘அப்ப மொடு அவல் பொரி’’ என்கிறார் அருணகிரிநாதர். ‘‘அப்பம் கலந்த சிற்றுண்டி” என்கிறார் பெரியாழ்வார். எனவே, அப்பம் அவல், பொரி, சர்க்கரை, நாவல் பழம், விளாம்பழம், கடலை சுண்டல் எல்லாம் இருவருக்கும் பிடித்த நிவேதனங்கள்.
17. பெரு வயிறு
பெருவயிறு என்பதற்கு பெரிய வயிறு (எல்லாம் அடக்கம்) என்றும், பெருமை படைத்த வயிறு என்றும் இரண்டு பொருள் உண்டு. அண்ட சராசரங்களை எல்லாம் அடக்கியதால் பெருமைமிக்க வயிறு படைத்தவன் என்று பிள்ளையாரை (மத்தள வயிறனை) சொல்வார்கள். ‘‘பெருவயிருடையான்’’ என்று கண்ணனுக்கும் சிறப்பு உண்டு. பிரளய காலத்தில் உலகங்களை எல்லாம் பாலகனாய், ஆலின் இலையின் மேல், யோக நிலையில் தன் வயிற்றுக்குள் அடக்கியவன் என்று கண்ணனையும் சொல்வார்கள். பெரும்பாலானோர், விநாயகர் பூஜையில் ஆரம்பித்து, பூஜை முடிகின்ற பொழுது சர்வம் ஸ்ரீ கிருஷ்ணாபனமஸ்த்து என்று சொல்லி முடிப்பார்கள்.
18. சங்கத்தமிழ்
ஆண்டாள், கண்ணன் மீது பாடிய திருப்பாவையை “சங்கத் தமிழ் மாலை” என்பார்கள். ஒளவையார், பிள்ளையாரிடம் அதே சங்கத்தமிழை ‘‘சங்கத் தமிழ் மூன்றும் தா’’ என்று கேட்கிறாள். பகவான் கண்ணனுக்கு தீர்த்தன் என்கின்ற பெயர் உண்டு. யமுனைத்ததுறைவன் என்று ஆண்டாள் பாடுகிறாள். விநாயகருக்கும் தீர்த்தம் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகையினால் பூஜை முடிந்த பிறகு விநாயகரை விசர்ஜனம் செய்யும் பொழுது நீரிலே கரைத்து விடுகின்றார்கள்.
மகாபாரதத்தை எழுதிய வேத வியாசரை பகவான் கண்ணனுடைய அவதாரமாக கருதும் மரபு உண்டு. ‘‘வியாசாய விஷ்ணு ரூபாயா’’ என்று விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வருகிறது. கண்ணனின் அம்சமான வியாசர் சொல்லச் சொல்ல, அதே மகாபாரதத்தை தன்னுடைய கொம்பினால் விநாயகர் எழுதினார் என்றும் ஒரு வரலாறு உண்டு. இப்படி விநாயகருக்கும் கண்ணனுக்கும் உள்ள ஒற்றுமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
19. விநாயரும் ஸ்ரீராமனும்
ஸ்ரீராமருக்கும் விநாயகருக்கும் ஒரு சில சுவாரசியமான ஒற்றுமைகளைக் காண்போம். இருவருமே தவத்தின் காரணமாக அவதரித்தவர்கள். ஸ்ரீராமன், தசரதனுக்கு மூத்த குமாரன். விநாயகப் பெருமான் சிவபெருமானுக்கு மூத்த குமாரன். ஸ்ரீராமன், தன்னுடைய தம்பிகளின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார். விநாயகப் பெருமான் தன் தம்பியான முருகப் பெருமானின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார் என்பதை கந்த புராணம் முதலிய நூல்கள் விரிவாக எடுத்துச் சொல்லும். ஸ்ரீவிநாயகப் பெருமானை நினைத்தால், எந்த செயல்களிலும் வெற்றி கிடைக்கும். ஸ்ரீராமனை நினைத்தால் எந்த செயல்களிலும் வெற்றி கிடைக்கும்.
மண்ணுல கத்தினிற் பிறவி மாசற
எண்ணிய பொருளெலாம் எளிதின் முற்றுறக்
கண்ணுதல் உடையதோர் களிற்றுமா
முகப் பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்
– என்பது விநாயகர் துதி.
நாடியபொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாகும் வேரியங்கமலை
நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவோர்க்கே
– என்பது ராமரின் துதி.
20. முருகனும் விநாயகரும்
இனி முருகனுக்கும் விநாயகருக்கும் உள்ள சில ஒற்றுமைகளைக் காண்போம். இருவருமே சிவபெருமானின் பிள்ளைகள். போதம் எனப்படும் ஞானத்திற்கு உரியவர்கள். பிரணவத்தின் பொருளை எடுத்து உரைத்தவர் முருகப் பெருமான். அந்த பிரணவ சொரூபமாகவே இருப்பவர் விநாயகப் பெருமான். இருவரும் கஜமுகன் என்ற பெயருடைய அசுரர்களை வதம் செய்தவர்கள். கார்த்திகை பெண்கள் வளர்த்த ஆறு குழந்தைகளையும் ஒன்றாக்கி முருகனாகத் தந்தவள் லோக மாதாவாகிய பார்வதி தேவி. அதைப் போலவே பிள்ளையாரையும் மஞ்சளால் உருவாக்கியவள் பார்வதிதேவி.
21. வாகனம்
முருகப் பெருமான் சூரனை சம்ஹாரம் செய்து சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் வைத்துக் கொண்டார். சேவல் முருகனின் கொடியிலும், மயில் முருகனின் வாகனமாகவும் மாறியது. அதே போலவே, கஜமுகாசுரனை இறுதியில் மூஞ்சூறாக மாற்றி தனக்கு வாகனமாகக் கொண்டவர் விநாயகப் பெருமான். முன்னால் பிறந்த சதுர்த்தியை விநாயகரும், அதற்குப் பின்வரும் சஷ்டியை முருகப் பெருமானும் தமக்கு உரிய திதியாக எடுத்துக் கொண்டனர்.
முருகனுக்கு கந்த சஷ்டி கவசம். விநாயகருக்கு விநாயகர் அகவல். முருகனுக்கு வள்ளி தெய்வானை என்ற இரண்டு சக்திகள் உண்டு. அதைப் போலவே விநாயகருக்கும் சித்தி புத்தி என்ற இரண்டு சக்திகள் உண்டு. பூமிகாரகனான செவ்வாய், விநாயகப் பெருமானை எண்ணி, தவம் செய்து, கிரகப்பதவியை அடைந்தார் என்பது புராணம். அந்தச் செவ்வாயின் அதிதேவதையாக விளங்குபவர் முருகப் பெருமான்.
22. விநாயகரின் அறுபடை வீடுகள்
முருகருக்கு அறுபடை வீடுகள் இருப்பது போலவே விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உண்டு.
1. திருவண்ணாமலை – அல்லல் போக்கும் விநாயகர்: திருவண்ணாமலை விநாயகரின் முதல்படை வீடாகக் கருதப்படுகிறது. இவ்விநாயகரைப் பற்றியே அவ்வையார் அல்லல் போம் வல்வினைப்போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைப்போம் என்ற பாடலைப் பாடியுள்ளார்.
2. திருமுதுகுன்றம் – ஆழத்து விநாயகர்: திருமுதுகுன்றம் என்றழைக்கப்படும் விருத்தாசலத்தில் ஆழத்து விநாயகர் அருள்புரிகிறார். இவர் நுழைவுவாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் 18 அடி ஆழத்தில் கிழக்கு முகமாக வீற்றிருக்கிறார்.
3. திருக்கடவூர் – கள்ளவாரண விநாயகர்: மூன்றாம் படைவீடான திருக்கடவூரில் இவர் கள்ளவாரண விநாயகர் என்ற பெயரில் அருள்புரிகிறார். ஒருமுறை விநாயகரை இந்திராதி தேவர்கள் வணங்க மறந்தனர். இதனால், அமிர்த கலசத்தை அவர் மறைத்து வைத்தார்.
4. மதுரை காரிய சித்தி விநாயகர்: மதுரையிலுள்ள மீனாட்சி அம்மன் கோயிலுள்ள காரிய சித்தி விநாயகர் நான்காம் படைவீடு விநாயகராக வணங்கப்படுகிறார். அம்மன் சந்நதிக்கு செல்லும் வழியிலுள்ள ஊஞ்சல் மண்டபம் அருகில் உள்ளார்.
5. பிள்ளையார்பட்டி – கற்பக விநாயகர்: ஐந்தாம் படைவீடு பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலாகும். இரு கரங்களுடன் உள்ள இவர் சிவலிங்கத்தை வலதுகையில் தாங்கி சிவபூஜை செய்யும் நிலையில் உள்ளார்.
6. திருநரையூர் – பொள்ளாப் பிள்ளையார்: கடலூர் மாவட்டத்தில் சிதம் பரத்திற்கு அருகே உள்ள திருநரையூரிலுள்ள பொள்ளாப் பிள்ளையாரே ஆறாம் படைவீட்டின் அதிபதி ஆவார். சிற்பின் உளியால் பொள்ளப்படாமல் (செதுக்கப்படாமல்) சுயம்புவாக தோன்றியதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார்.
23. சிவனும் விநாயகரும்
இனி சிவபெருமானுக்கும் விநாயகப் பெருமானுக்கும் உள்ள ஒற்றுமைகளைக் காண்போம். இதை வடமொழியில் ‘‘ஸாம்ய விசேஷம்’’ என்று சொல்வார்கள். இருவரும் நாகங்களைத் தரித்திருப்பவர்கள். சிவனுக்கு மூன்று கண்கள் உண்டு. முக்கண்ணன் என்று அழைப்பார்கள். விநாயகப் பெருமானுக்கும் மூன்று கண்கள் உண்டு. கிரியா வழி, ரூப வழி நோக்குமிடத்து சிவனும் பிள்ளையாரும் ஒன்றே எனும் தத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். விநாயகர் மூன்று கண்களோடு, ‘த்ரிநேத்ர கணபதியாக’ எழுந்தருளியிருக்கும் அரிய தலம் ராஜஸ்தான் மாநிலம் ரந்தாம்பூரில் உள்ளது. வேத சொரூபமாக விளங்குகின்ற சிவபெருமான், தானே வேத ரூபியாக மாறிய அவதாரம்தான் விநாயகர். சந்திரனையுடைய சாபத்தைத் தீர்த்தவர்கள் சிவனும் விநாயகரும்.
24. தோப்புக்கரணம்
ஸ்ருதி என்பது வேதங்களைக் குறிக்கும். காதுகளையும் குறிக்கும். அதனால் நல்ல விஷயங்களை காதால் கேட்பதை “சிரவணம்” என்றார்கள். பக்தியிலேயே முதன்மையான பக்தி சிரவண பக்திதான். அதைப் போல செல்வங்களிலே தலையான செல்வம் செவிச் செல்வம்தான். ஞானம் என்கின்ற விஷயத்தை, ஒரு உருவமாகப் பார்த்தால் காதுகள் என்றுதான் வரும். எனவேதான் வேதப் பொருளாகிய விநாயகரை வணங்குகின்ற பொழுது ஸ்ருதி எனும் காதுகளைப் பற்றிக் கொண்டு தோப்புக் கரணம் போடுகின்றோம். தோப்புக் கரணம் என்பது யோக சாஸ்திரத்தில் ஒன்றாகவும் மிகச் சிறந்த பலன்களை அளிப்பதாகவும் சொல்கிறார்கள். விநாயகர் வழிபாட்டு முறை அகத்தைக் காப்பது போலவே (soul), புறமாகிய உடல் நலனையும் (health) காக்கிறது என்பதற்கு தோப்புக் கரணம் ஒரு எடுத்துக்காட்டு.
25. ஐங்கரன்
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
விநாயகரின் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய பஞ்ச கிருத்தியங்களையும் அவர் தனது ஐந்துகரங்களால் இயற்றுகின்றார் எனப்படுகின்றது. ஐந்து கருமங்கட்கும் அவரே அதிபதி என்பதனால், அவருக்கு ‘‘ஐங்கரன்’’ என்ற நாமம் விளங்குகின்றது. அவரை ‘‘பஞ்சகிருத்திகன்’’ என்றும் கூறுவர். அவரது முற்றறிந்த ஞானத்தை முறம் (சுளகு) போன்று பரந்து விரிந்த
இருசெவிகளும் விளக்குகின்றன.
26. என்னென்ன தத்துவங்கள்?
சமய தத்துவங்களின் அத்தனை விளக்கங்களையும் விநாயகரின் திருவுருவத்தில் நம்மால் காண முடியும் அதனால்தான், விநாயகருடைய தரிசனம் என்பது தத்துவங்களை ஒரு உருவமாகப் பார்த்தால் என்ன தரிசனம் வருமோ, அந்த தரிசனமாக இருக்கிறது. விநாயகப் பெருமானை வணங்குகின்ற பொழுது இந்தப் புரிதலோடு வணங்குவது சிறப்பு. விநாயகப் பெருமானின் வலது பக்க முள்ள ஒடிந்த கொம்பு “பாசஞானத்தையும்’’ இடது பக்கமுள்ள கொம்பு “பதிஞானத்தையும்’’ உணர்த்துவதாக உள்ளன. விநாயகரின் அடிக்கீழ் மூஷிகம் அழுந்தி அமைதியாகக் காணப்படுவதை, பிரணவ மூர்த்தியின் அடிக்கீழ் ஆணவ மலம் வலிகெட்டு அமைதி காக்கும் என்பதை விளக்குகின்றது.
27. விஸ்வ காரணம்,விக்ன வாரணம்
அவரது உந்தியைச் சுற்றியுள்ள சர்ப்பம் ‘‘குண்டலினி சக்தியின்’’ வடிவம் என்பர். அதன் விரிவுகளும், சுருக்கங்களுமே பிரபஞ்சத்தின் தோற்றம், சுருக்கம் எனப்படுகின்றது. அதை அவர் உந்தியில் அணிந்திருப்பதானது, உலகிற்கு நிமித்த காரணர் (மூலாதார மூர்த்தி) அவர்தாம் என்பதையும் உணர்த்துகின்றது. இதை முத்துஸ்வாமி தீக்ஷிதர் தமது பிரபலமான ‘‘வாதாபி கணபதிம் பஜேஹம்’’ கீர்த்தனையில் விளக்குகின்றார்.
பூதாதி ஸம்ஸேவித சரணம்
பூத பௌதிக ப்ரபஞ்ச பரணம்
வீத ராகிணம் வினத யோகினம்
விஸ்வ காரணம் விக்ன வாரணம்
புரா கும்ப ஸம்பவ முனி வர ப்ரபூஜிதம் த்ரி-கோண மத்ய கதம்
முராரி ப்ரமுகாத்யுபாஸிதம் மூலாதார க்ஷேத்ர ஸ்திதம்
பராதி சத்வாரி வாகாத்மகம் ப்ரணவ ஸ்வரூப வக்ர துண்டம்
நிரந்தரம் நிடில சந்த்ர கண்டம் நிஜ வாம கர வித்ருதேக்ஷு தண்டம்
28. பிள்ளையார் சுழி
பிள்ளையார் சுழி போட்டு செயல் எதையும் தொடங்கு – அதன்
துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
– என்றொரு பாடல் உண்டு.
பெரும்பாலானோர், எதை எழுதத் தொடங்கும் பொழுதும், எழுதும் தாளின் தலைப்பில் முதலாவதாக ‘‘பிள்ளையார் சுழி’’ போட்டுவிட்டே எழுதத் தொடங்குவர். பிள்ளையார் சுழி ஒரு வட்டமும் ஒரு கோடும் இணைந்து இருக்கும். பூஜ்ஜியமன வட்டத்தை ‘‘0’’ பிந்து என்றும், தொடர்ந்து வரும் கோட்டை ‘‘நாதம்’’ என்றும் கொள்கின்றனர். எனவே பிள்ளையார் சுழியை ‘‘நாதபிந்து’’ என்பர். பிந்து சுழியாகவும், நாதம் நீண்ட கோடாகவும் காட்சி அளிக்கிறது.
பிள்ளையார் சுழி (உ) என்பது உலகத்தைக் குறிக்கிறது. அதில் உள்ள சுழி உலகத்தையும், நீண்ட கோடு அதன் இயக்கத்தையும் குறிக்கிறது. சுழி என்பது ஜனன மரண சுழற்சியையும், அதில் இருந்து வெளியே இழுக்கப்பட்ட கோடு, முக்தியையும் குறிக்கிறது. அதாவது ஜனன மரண சுழற்சியில் இருந்து விடுபடுதலைக் குறிக்கிறது. பிள்ளையாருடன் சிவ சக்தியின் இணைப்பை இது உணர்த்துவதாக உள்ளது. அவரை வழிபட்டுத் தொடங்கினால் செய்கருமம் இடையே எவ்வித விக்கினங்களும் இன்றி நிறைவுபெறும் என்பது நம்பிக்கை.
29. தலையில் குட்டிக் கொள்வது ஏன் என்பது தெரியுமா?
இதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. அகத்தியர் வடநாட்டில் இருந்து தென் இந்திய நாட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது, அவர் கமண்டலத்தில் கொண்டு வந்த காவிரி நதி நீரை காகம் வடிவில் வந்து விநாயகர் கவிழ்த்தார். பின்னர், அந்தணச் சிறுவன் வடிவில் விநாயகர் அகத்தியர் முன் வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர், விநாயகரின் தலையில் குட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மை காக்க காவிரியை உருவாக்க அப்படிச் செய்ததாகக் கூறினார்.
தன் தவறுக்கு வருந்திய அகத்தியர், தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். அன்று முதல் விநாயகர் வழிப்பாட்டில் தலையில் குட்டிக் கொள்ளும் வழக்கம் வந்தது. நெற்றியின் இரு பொட்டுகளிலும் குட்டிக் கொள்வதால் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி நன்கு சுரக்கும். விநாயகர் முன்பு பயபக்தியுடன் தலையில் குட்டிக் கொண்டோர், கூரிய மதியும் சீரிய நிதியும் பெறுவார்கள்.
30. விநாயக விரதங்கள்
ஒவ்வோர் ஆண்டிலும் விநாயகருக்கான விரத நாட்கள் உண்டு. சுக்கில பட்ச (வளர்பிறை) சதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச (தேய்பிறை) சதுர்த்தி என்றும் இரண்டு சதுர்த்தி விரத தினங்கள். சுக்கில பட்ச சதுர்த்தியை ‘சதுர்த்தி விரதம்’ என்று கொள்வர். அவற்றுள்ளும் ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்ச சதுர்த்தியை ‘நாக சதுர்த்தி’ என்றும், ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்ச சதுர்த்தியை ‘விநாயக சதுர்த்தி’ என்றும் கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு மாதமும் தேய்பிறையில் வருகின்ற சதுர்த்தி ‘சங்கடஹர சதுர்த்தி’ ஆகும். விநாயகரைத் துதிப்போரின் சங்கடங்களை அவர் நீக்கியருளுவார் என்பதனால் அத்தினத்தில் வருகின்ற விரதத்தை ‘சங்கடஹர சதுர்த்தி விரதம்’ என்கின்றனர்.
ஆவணி மாதத்தில் வருகின்ற கிருஷ்ண பட்ச சதுர்த்தியை ‘சங்கடஹர விநாயக சதுர்த்தி’ என்று வழங்குவர். ஆவணி மாதத்தில் வருகின்ற இரண்டு சதுர்த்தி விரதங்களும் முக்கியமானவை. எனினும் ‘விநாயக சதுர்த்தி விரதமே அதிவிசேஷமானது. விநாயகர் சதுர்த்தி வழிபாடு என்னென்ன தரும் என்பதை இந்தப் பாடல் சொல்கிறது.அல்லல்போம், வல்வினைபோம் அன்னை வயிற்றில்பிறந்ததொல்லை போம், போகாத் துயரம் போம் நல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்துள் மேவும்கணபதியைக் கைதொழுதக் கால்இப்படி விநாயகரின் பெருமைகளையும், விரத மகிமைகளையும் சொல்லிக் கொண்டே போகலாம்.