மும்பை: ஆபாச ஆடைகளால் சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை, ரூ.70 லட்சம் பரிசு பெற்ற நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் அதற்கான ஆதாரங்களை அவர் வெளியிட்டுள்ளார். சமூக வலைதள பிரபலம் மற்றும் நடிகையுமான உர்பி ஜாவேத், தனது வித்தியாசமான மற்றும் சர்ச்சைக்கிடமான ஆடை அணிந்துவந்து அலப்பறை செய்வார். தனது ஆடைத் தேர்வுகள் காரணமாக அவர் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களையும், ட்ரோல்களையும் எதிர்கொண்டு வருகிறார்.
இதுமட்டுமின்றி, பலமுறை அவருக்கு எதிராக வெறுப்பு நிறைந்த செய்திகளும், மிரட்டல்களும் வருவது வாடிக்கையாக இருந்து வந்தது. இருப்பினும், இதுபோன்ற எதிர்மறை விமர்சனங்களைக் கண்டு துவளாமல், தனக்கே உரிய பாணியில் தொடர்ந்து ெசயல்பட்டு வந்தார். இந்த நிலையில், தற்போது பிரபல தயாரிப்பாளர் தொகுத்து வழங்கிய ரியாலிட்டி நிகழ்ச்சியில் உர்பி ஜாவேத் வெற்றி பெற்றுள்ளார். நிகிதா லூதருடன் இணைந்து பட்டத்தை வென்ற அவர், ரூ.70.05 லட்சம் பரிசுத் தொகையையும் தட்டிச் சென்றார்.
ஆனால், இந்த வெற்றிக்காக தனக்குக் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் வருவதாக உர்பி ஜாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். சிலர் அனுப்பிய அருவருப்பான செய்திகளின் ஸ்கிரீன்ஷாட்டுகளைப் பகிர்ந்த அவர், ‘என் ஆடைகளுக்காக மட்டுமல்ல, ரியாலிட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதற்காகவும் கீழ்த்தரமாக என்னை விமர்சிக்கின்றனர். இதுபோன்ற விமர்சனங்கள் வேதனை அளிக்கிறது. கொலை மிரட்டல்கள் வருகின்றன. நான் என்ன செய்தாலும் எனக்கு எதிரான வெறுப்பு நிற்கப்போவதில்லை. ஆனால், இந்த வெறுப்பு ஒருபோதும் என்னை நிறுத்தாது’ என்று கொந்தளிப்புடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, அர்ஜுன் பிஜ்லானி உள்ளிட்ட பல தொலைக்காட்சி பிரபலங்கள் உர்பிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.