*கலெக்டர் பேச்சு
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொத்திடல் களக்குடி மற்றும் அழகர்தேவன்கோட்டை ஊராட்சிகளில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கைகள் குறித்த மனுக்களை பெற்று கொண்டார்.இம்முகாமில் கலெக்டர் பேசுகையில், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உங்களுடைய பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாகவும் வழங்கி பயன்பெற முடியும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கிராமப்புற மக்கள் பயன்பெறுவதே ஆகும்.
மேலும் இம்முகாம்களில் 15க்கும் மேற்பட்ட துறைகளின் சார்பில் அலுவலர்கள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள். எனவே தங்களுடைய பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுவுடன் தேவையான விவரங்களை இணைத்து அலுவலர்களிடம் வழங்கி பயன்பெற வேண்டும் எனத் தெரிவித்தார்.
முன்னதாக கொத்திடல் களக்குடி மற்றும் அழகர்தேவன்கோட்டை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் தொடர்பாக கேட்டறிந்து, காலதாமதமின்றி மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில் பிடிஓ லெட்சுமி, கொத்திடல் களக்குடி ஊராட்சி தலைவர் ஆனந்தன்,அழகர்தேவன்கோட்டை ஊராட்சி தலைவர் ராமசந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.