*விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு பகுதியில் உள்ள வெள்ளாங்கரையை பலப்படுத்தி, கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். சேத்தியாத்தோப்பு புதிய பாலத்தில் துவங்கி சென்னிநத்தம், கிளாங்காடு, மிராளூர், மஞ்சக்கொல்லை, ஒரத்தூர், அழிச்சிகுடி, ஆயிபேட்டை, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
வெள்ளாற்றில் மழை காலங்களில் மழை வெள்ளநீர் வரும்போது சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளுக்கும் வெள்ளாற்றில் போர்வெல்கள் போடப்பட்டு இரண்டு கிணறுகள் அமைத்து அதன்மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. விவசாய போர்வெல்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விளை நிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் வெள்ளாற்று பகுதியில் 15 கிலோ மீட்டர் தூரம் வரை ஆற்றங்கரையில் இருபுறமும் 5 ஆண்டுகளுக்கு மேலாக கருவேல மரங்கள் ஓங்கி வளர்ந்துள்ளதால் மழை வெள்ள காலங்களில் கரைகள் உடைப்பு ஏற்படும் சூழல் உள்ளது. கரைகளில் பல இடங்களில் உடைப்பும் ஏற்பட்டுள்ளது. கரைகளுக்கு பாதுகாப்பில்லாததால் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் வெள்ளாற்றின் உள்ளேயும், கரைகளிலும் ஓங்கி வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும், என கூறுகின்றனர்.
ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன் சேத்தியாத்தோப்பு புதிய பாலத்தில் இருந்து கரைகள் பலப்படுத்தப்பட்டு கரையின் மீது செம்மண் சாலை அமைத்து பராமரிக்கபட்டு வந்தது. காலப்போக்கில் பராமரிக்க தவறியதால் கருவேல மரங்கள் அதிகளவில் ஓங்கி வளர்ந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கி, பொதுப்பணித்துறை மூலம் கரையை பலப்படுத்தி கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.