சென்னை: ஓ.பன்னீர்செல்வம் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து நேற்று மதியம் மதுரை சென்றார். அப்போது, ஆலந்தூரை சேர்ந்த அவருடைய ஆதரவாளர் ஒருவர், பி சி ஏ எஸ், தற்காலிக பாஸ் பெற்று, ஓ.பன்னீர்செல்வத்தை வழி அனுப்பி விட்டு வந்தார். இவரை பார்த்ததும் ஓபிஎஸ்.சை வழி அனுப்ப வந்திருந்த பல்லாவரத்தை சேர்ந்த ஆதரவாளர்கள், அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விமான நிலையம் இருப்பது செங்கல்பட்டு மாவட்டம். எனவே பல்லாவரத்தைச் சேர்ந்த நாங்கள் தான், பன்னீர்செல்வத்தை விமான நிலையத்தில் வழி அனுப்புவோம், வரவேற்போம்.
ஆலந்தூரை சேர்ந்த நீங்கள், எல்லை தாண்டி வரக்கூடாது என்று எச்சரித்தனர். அப்போது அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் ஓ.பன்னீர்செல்வம், மதுரையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார். வழக்கம்போல் ஆலந்தூர் பகுதியை சேர்ந்த ஒருவர் பி சி ஏ எஸ், பாஸ் வாங்கி உள்ளே சென்று, பன்னீர்செல்வத்தை அழைத்து வந்து காரில் ஏற்றி அனுப்பினார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்க வந்த பல்லாவரம் ஆதரவாளர்கள், ஆலந்தூர் ஆதரவாளர்களிடம் கடும் வாக்குவாதம் செய்து கைகலப்பில் ஈடுபட்டனர்.
இதனால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு நின்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், இரு தரப்பையும் அமைதிப்படுத்தினர். அதோடு இனிமேல் இதேபோல் விமான நிலையத்திற்குள் நீங்கள் சண்டை போட்டுக் கொண்டால், ஓ.பன்னீர்செல்வத்தை வழி அனுப்பவும், வரவேற்று அழைத்துச் செல்லவும் யாரையும் அனுமதிக்க மாட்டோம். பி சி ஏ எஸ், பாஸ் கொடுப்பதற்கும் தடை விதித்து விடுவோம் என்று எச்சரித்து அனுப்பினர். இதன் காரணமாக, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வருகை பகுதியில் நேற்று இரவு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.