சென்னை: சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட்டு தனது அரசியல் வாழ்வில் முதல் முறையாக காரில் அதிமுக கொடி, சின்னம் இல்லாமல் பயணம் செய்தார். அதிமுகவின் கட்சிக் கொடி, பெயர், இரட்டை இலை சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கூடாது என்று, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்திருக்கிறது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக சிங்கப்பூர் சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் இரவு சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
அவருக்கு விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள், அதிமுக கொடிகள் இல்லாமல் வரவேற்பு அளித்தனர். மேலும் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தும் காரில் அதிமுக கட்சி கொடி இல்லாமல் சென்னை விமான நிலையத்திலிருந்து, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு புறப்பட்டு சென்றார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில், தனி நீதிபதி வழங்கிய அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்தக்கூடாது என்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வத்தின் மேல் முறையீட்டு மனு, இரு நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணைக்காக வர உள்ளதாக ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.