சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆவின் பால் அட்டைதாரர்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியில் ஆவின் நிர்வாகம் இறங்கியிருக்கிறது. தற்போது பால் பூத்துகளில் மாதம் ஒருநாள் பால் அட்டைகளை தருவதற்குப் பதிலாக, ஆங்காங்கே உள்ள ஆவின் அலுவலகங்களுக்கு சென்று அட்டைகளை பெற வேண்டும். மேலும், எண்ணியல் பரிமாற்றம் மூலமாக மட்டுமே பால் அட்டைகள் வழங்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு அலுவலகத்தில் 20 முதல் 25 பூத்துகளுக்கான பால் அட்டைகள் வழங்கும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. அத்துடன், பால் அட்டைகள் வாங்குவதற்காக மணிக் கணக்கில் காத்திருக்கக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, பால் அட்டைதாரர்கள் எந்த பூத்துகளில் பால் பெற்றுக் கொண்டிருக்கிறார்களோ அதே பூத்தில் மாதாந்திர அட்டையை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.