மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் விக்கிரபாண்டியம் ஊராட்சி காரியமங்கலத்தை சேர்ந்த விவசாயி கண்ணன். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் அவரை, கொத்தவரை, புடலை, வெண்டை, தக்காளி, கீரை வகைகள் ஆகிய 10க்கும் மேற்பட்ட காய்கறி வகைகளை பயிரிட்டு வருகிறார்.
இந்நிலையில், திருவாரூரில் சமீபத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின்போது கலெக்டர் சாருஸ்ரீயிடம், விவசாயி கண்ணன் ஒரு கோரிக்கை வைத்தார். அதாவது, காரியமங்கலம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளிக்கு ஓராண்டுக்கு சத்துணவுக்கு தேவையான காய்கறிகள் தினசரி தேவையான அளவுக்கு இலவசமாக தர விரும்புகிறேன். இதற்கு கலெக்டர் அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இதைக்கேட்ட கலெக்டர், விவசாயி கண்ணனை பாராட்டியதுடன் அவரது கோரிக்கைக்கு உரிய அனுமதியை பெற்று தருகிறேன் என்று உறுதியளித்தார்.