புதுடெல்லி: ஊட்டச்சத்து குறைபாட்டில் குஜராத் மாநிலம் மிகவும் மோசமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதே சமயம் கேரளா, தமிழ்நாடு டாப் நிலையில் உள்ளன. ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக நிதி ஆயோக் வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அறிக்கையின் படி, குஜராத் மாநிலத்தை சேர்ந்த சுமார் 38.09 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் கிராமபுறங்களை சேர்ந்த பாதிக்கும் மேற்பட்டோர், அதாவது 44.45 சதவீதம், நகர்ப்புறங்களில் சுமார் 28.97 சதவீதம் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறது.
பின்தங்கிய மாநிலங்களாக இருக்கும் சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேசம் உள்ளிட்டவை ஊட்டச்சத்து குறைபாடு அளவில் குஜராத் மாநிலத்தை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன. தேசிய குடும்பநல கணக்கெடுப்பின் படி தேசிய அளவில் ஊட்டச்சத்து குறைபாடு மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் குஜராத் 4வது இடம்பிடித்துள்ளது. குஜராத் மாநில குழந்தைகளில் சுமார் 39 சதவீதம் பேர் தங்களது வயதிற்கு ஏற்ற எடையை விட குறைந்த எடை கொண்டிருக்கின்றனர். 2021ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் 27.3 சதவீதம் பேரும், குஜராத் மாநிலத்தில் 38.9 சதவீதம் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது என பொருளாதார பேராசிரியர் அட்மன் ஷா தெரிவித்தார்.
இந்த தகவல்களின் படி குஜராத் மாநிலத்தில் ஒவ்வொரு 100 பேரில் மூன்று பேர் வீதம் ஊட்டச்சத்து குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா, பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் குஜராத்தை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 7.81 சதவீத குறைபாடும், ஆந்திராவில் 6.06 சதவீதமும், பஞ்சாப் மாநிலத்தில் 4.75 சதவீதமும், தமிழ்நாட்டில் 2.20 சதவீதமும், கேரளாவில் 0.55 சதவீதமும், கர்நாடகாவில் 7.58 சதவீதமும் ஊட்டச்சத்து குறைாபடு உள்ளது. இதனால் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் ஊட்டசத்து மிக்க மாநிலங்களாக நிதிஆயோக் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.