மதுரை: ஆறு மாதங்களுக்குள் மாவட்டந்தோறும் ஒரு முதியோர் இல்லத்தை அரசு அமைக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த அதிசயகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, வேளாங்கண்ணி பகுதியில் உள்ள கோயில் வளாகங்கள், பேருந்து நிலையங்களில் ஆதரவற்ற முதியவர்கள் பலர் நடைமேடை, பேருந்து நிறுத்தங்களில் ஆதரவின்றி தங்கியுள்ளனர்.
இவர்களை பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டம் 2009ன் படி மாவட்டந்தோறும் ஆதரவற்றோர் முதியோர் காப்பகம் அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர், ‘‘சட்டப்படி மாவட்டத்தில் ஒரு முதியோர் இல்லமாவது அரசால் நடத்தப்பட வேண்டும். ஆனால், தனியார் தொண்டு நிறுவனங்களால் முதியோர் இல்லங்கள் நடத்தப்படுகின்றன. எனவே, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆறு மாதங்களுக்குள் ஒரு முதியோர் இல்லத்தையாவது அரசு அமைக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.