திருவள்ளூர்: திருவள்ளூர் முகமது அலி 3வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வழக்கறிஞர். இவரது மனைவி பாரதி (32). நிறைமாத கர்ப்பிணியான பாரதிக்கு கடும் இடுப்பு வலி மற்றும் காய்ச்சல் காரணமாக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு 2வது மாடியில் உள்ள கர்ப்பிணிகள் வார்டில் செவிலியர்களிடம் விட்டுவிட்டு பின்னர் மனைவிக்கு தேவையான உடைகளை எடுப்பதற்காக மணிகண்டன் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இந்தநிலையில், மருத்துவமனையில் செவிலியர்கள் அமரும் இருக்கையில் பாரதி அமர்ந்ததாக தெரிகிறது.
அப்போது அங்கு வந்த நர்ஸ்கள், ‘ஏன் இங்கு அமர்ந்துள்ளீர்கள் என்று பாரதியிடம் கேட்டபோது, ‘’இது மூன்றாவது பிரசவம்’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து நர்ஸ்கள், ‘’மூன்றாவது பிரசவமா’’ என கேட்டு இந்த இருக்கையில் உட்காரக்கூடாது அப்படி ஓரமாக போய் உட்காரு’’ என்று தரையில் அமரவைத்துள்ளதாக தெரிகிறது. மேலும் சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக அவருக்கு எந்த முதலுதவி சிகிச்சையும் அளிக்காததால் இடுப்பு வலியும் காய்ச்சலும் அதிகமாகியுள்ளது. இதனிடையே கணவர் ஆஸ்பத்திரிக்கு வந்ததும் தனக்கு நடந்தது பற்றி தெரிவித்ததும் செவிலியரிடம் போய் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த நர்ஸ்கள், உடனடியாக கர்ப்பிணிக்கு அவசர அவசரமாக குளுக்கோஸ் ஏற்ற வேண்டும் என்று கையில் வேகமாக ஊசியை குத்தியதால் வலி தாங்க முடியாமல் பாரதி கதறியுள்ளார். இதனால் விரக்தியடைந்த மணிகண்டன், அங்கிருந்து உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.