*சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை
சேலம் : சேலத்தில் கருவில் இருக்கும் குழந்தை பாலினம் கணடறிந்த விவகாரத்தில், சிக்கிய ஆரம்ப சுகாதார நிலைய செவிலியரை டிஸ்மிஸ் செய்து சுகாதாரதுறை உத்தரவிட்டுள்ளது.
சேலம் அருகே வீராணம் கோழிப்பண்ணை பஸ் நிறுத்தம் அருகே பசுபதி ஸ்கேன் சென்டரில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பாலினத்தை கண்டறிந்து விதிமுறையை மீறி தெரிவித்து வருவதாக புகார்கள் சுகாதாரத்துறைக்கு வந்தது.
இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார அதிகாரிகள் அதிரடியாக இந்த ஸ்கேன் சென்டரில் ஆய்வு செய்தனர். அப்போது. ஆச்சாங்குட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் முத்தமிழ், தெடாவூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கலைமணி ஆகிய 2 பேரும், இந்த கிளினிக் மையத்தை நடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் இந்த ஆய்வில் 3பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து ஸ்கேன் செய்தது உறுதிப்படுத்தப்பட்டது. கருவில் உள்ள பாலினத்தை அறிய ஒவ்வொருவரிடமும் தலா ₹15ஆயிரம் வசூலித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து ஸ்கேன் சென்டரில் இருந்து மிஷனை பறிமுதல் செய்தனர். பின்னர், ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக வாழப்பாடி மருத்துவ அலுவலர் ரமேஷ்குமார் வீராணம் போலீசில் புகார் அளித்தார். அதில், ஸ்கேன் சென்டர் நடத்தி கருவில் இருந்து குழந்தை ஆணா, பெண்ணா என விதிமுறையை தெரிவித்த வந்த அரசு மருத்துவர் முத்தமிழ், செவிலியர் கலைமணி மற்றும் 6 இடைத்தரகர்கள் மீது புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த குற்றத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர் முத்தமிழ், செவிலியர் கலைமணி, உடந்தையாக செயல்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள் அம்பிகா வனிதா, வசந்தி, மங்கை, ராணி, கலைசெல்வி, மகேஸ்வரி ஆகிய 8பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.மேலும், இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது தொடர்பாக மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், விராணத்தில் சீல் வைக்கப்பட்ட ஸ்கேன் சென்டரில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அதனை கலைக்க சேலத்தில் உள்ள 3 தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது தெரிந்தது.
இதையடுத்து, சுகாதாரதுறை அதிகாரிகள் விதிமுறையை மீறி செயல்பட்ட சேலம் டவுன் மேட்டுதெருவில் உள்ள தனியார் மருத்துவமனை, பொன்னம்மாபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை, பெரியபுதூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஆகிய 3மருத்துவ மனைகளில் சோதனை செய்ததில், மருத்துவமனைகளில் விதிமுறையை மீறி கருகலைப்பு செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த 3தனியார் மருத்துமனைகளை மூடப்பட்டது. இதனிடையே, இது தொடர்பான அறிக்கையை சேலம் மாவட்ட சுகாதார அலுவலர்கள், தமிழ்நாடு அரசு இயக்குனருக்கு (மருத்துவ பணிகள்) அனுப்பினர்.
இந்த விவகாரத்தில் சிக்கிய தெடாவூர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் கலைமணியை நிரந்த பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்து தமிழ்நாடு அரசு மருத்துவ பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். மற்றவர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.