கவுகாத்தி: முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அசாமுக்கு ஆபத்து என்று மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார்.
கவுகாத்தியில் நடந்த சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசியதாவது:
அசாமில் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2021ல் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் எண்ணிக்கை 41 சதவீதமாக இருந்தது. கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இது 34.22 சதவீதமாகதான் இருந்தது. அதேநேரத்தில் 61.47 சதவீதமாக இருந்த இந்துக்கள் மக்கள் தொகை இப்போது 57 சதவீதமாக குறைந்துவிட்டது. இந்த நிலை தொடர்ந்தால், இந்துக்கள் மக்கள் தொகை 50 சதவீதத்தைவிட குறைந்துவிடும். அசாம் பூர்வகுடி மக்கள் 13 மாவட்டங்களில் சிறுபான்மையினர் ஆகிவிட்டனர்.
இந்து- முஸ்லிம் மக்கள் தொகையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படுவதை தடுக்க முயற்சித்து வருகிறேன். இந்துக்களும், முஸ்லிம்களும் குடும்ப கட்டுப்பாடு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அதேநேரத்தில் சமூகத்தின் சில பிரிவினரிடம் பல பெண்களை திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இவ்வாறு ஹிமந்தா பேசினார்.