பெரம்பூர்: குளிக்கும்போதும் உடை மாற்றும்போது மனைவியின் படம்பிடித்து அவற்றை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்த சைக்கோ புத்திக்கொண்ட கணவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் 20 வயது பெண். இவருக்கும் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 8வது பிளாக்கை சேர்ந்த லோகாஷ் (30) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தனியார் கம்பெனியில் லோகாஷ் சூபர்வைசராக பணியாற்றுகிறார். திருமணம் முடிந்த முதல் நாளே மனைவியை கொடுமைப்படுத்த ஆரம்பித்துள்ளார்.
அதாவது முதல்நாள் அன்று தனது செல்போனில் மனைவியை பல கோணங்களில் போட்டோ எடுத்துள்ளார். கணவர்தானே போட்டோ எடுக்கிறார் என்று நினைத்து சாதாரணமாக நினைத்துவிட்டார். இதன்பிறகு லோகாஷின் நடவடிக்கை எல்லைமீறியுள்ளது. அதாவது மனைவியை அரை நிர்வாணமாக நிற்க வைத்து படம் பிடித்து அவற்றை தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். ‘ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று மனைவி கேட்டபோது ’சும்மாதான் எடுக்கிறேன் என்று லோகாஷ் கூறியுள்ளார்.
இதுசம்பந்தமாக தம்பதி இடையே பிரச்னை வெடிக்க ஆரம்பித்துள்ளது. இதையடுத்து லோகாஷின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் இதற்கு எந்தவித பதிலும் தெரிவிக்காததுடன் மகனுக்கு ஆதரவாக செயல்பட்டுவந்ததாக தெரிகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பெண், எம்கேபி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து லோகாஷை அழைத்து போலீசார் விசாரித்ததுடன் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது அதில் மனைவியின் அரை நிர்வாண படங்கள் இருந்தது. இதையடுத்து லோகாஷை போலீசார் கடுமையாக எச்சரித்ததுடன், ‘இனிமேல் இதுபோன்று செய்யக்கூடாது’ என்று கூறி அனுப்பியுள்ளனர். அத்துடன் லோகாஷின் செல்போனை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பத்திரமாக வைத்திருந்தனர்.
இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு லோகாஷ், தனது மனைவி செல்போனை எடுத்து அவர் குளிக்கும் போதும் உடை மாற்றும்போதும் அவருக்கு தெரியாமல் போட்டோ எடுத்து அவரது செல்போனிலேயே புதிதாக இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஆரம்பித்து அதில் மனைவியின் அரை நிர்வாண படங்களை பதிவேற்றம் செய்துள்ளார். சில நாட்கள் கழித்து தனது செல்போனில் அந்த படங்கள் இருப்பது பார்த்து மனைவி கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி லோகாஷிடம் கேட்டு கடும் வாக்குவாதம் செய்துவிட்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதுகுறித்து மீண்டும் எம்கேபி. நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து மீண்டும் லோகாஷை அழைத்து விசாரணை நடத்தியபோது மனைவியின் நிர்வாண படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து லோகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுசம்பந்தமாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.