சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. கடந்த 18 ஆண்டுகளில் முன்னாள் முதல்வர் கலைஞர், முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தலைவர்கள் இரா.நல்லகண்ணு, கி.வீரமணி உள்ளிட்ட 106 சான்றோருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், ஆந்திர மாநில முன்னாள் துணை வேந்தர் கே.எஸ்.சலம்(அம்பேத்கர்), நடிகர் சத்யராஜ் (பெரியார் ஒளி), தியாகு (மார்க்ஸ் மாமணி), முனைவர் ஜம்புலிங்கம் (அயோத்தி தாசர் ஆதவன்), வைத்திய லிங்கம் (காமராசர் கதிர்), மவுலவி பி.ஏ.காஜா முயீனுத்தீன் பாகவி (காயிதே மில்லத் பிறை), பேராசிரியர் சண்முகதாஸ் (செம்மொழி ஞாயிறு) நேற்று ஆகியோருக்கு வழங்கப்பட்டது . இந்த விழாவில் விருதுகள் வழங்கிய திருமாவளவன் பேசியதாவது: தமிழ்நாடு அரசியலை நாம் கூர்மைப்படுத்துகிறோம்; சனாதன சக்திகள் தமிழ்நாடு மண்ணை நஞ்சாக்க விடமாட்டோம். சனாதன சக்திகளா?, விடுதலை சிறுத்தைகளா? என்பதுதான் தமிழ்நாட்டு பாலிடிக்ஸ். தமிழ்நாட்டு அரசியலை மதவாத அரசியலை நோக்கி மடைமாற்றம் செய்ய பலர் முயற்சிக்கின்றனர்.மதச்சார்பின்மைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க செயல்படுவதால் அது கூர்மைப்படுகிறது. மதச்சார்பின்மை கூர்மைப்படக் காரணமான ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க-வுக்கு நன்றி. தேர்தல் கட்சி என்ற வகையில் பா.ஜ.க-வை எதிர்க்கவில்லை; அவர்களின் அரசியலை எதிர்க்கிறோம்.
நாம் கொடியேற்ற, பேனர் கட்ட, பொதுக்கூட்டங்களை நடத்த போராட வேண்டியுள்ளது. எங்கள் இயக்கம் சட்டமன்ற, நாடாளுமன்ற சீட்டு பேரம் பேசுவதற்கு அல்ல; ஒருநாள் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றுகூட நான் அறிவித்துவிடுவேன். இருக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை; பிளாஸ்டிக் சேர், தரையில் கூட அமருவேன். இந்து மதம் என்ற ஒன்றே கிடையாது; ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு இந்து மதம் வந்தது; பிற மதங்களில் சகோதரத்துவம் உள்ளது; இந்து மதம் அடிப்படையிலேயே பாகுபாடு கொண்டது; அணு ஆயுதங்களால் கூட தகர்க்க முடியாதது இந்தியாவில் உள்ள சாதிய கட்டமைப்பு.
புண்ணியம் கிடைக்குமென திருநீறு பூசவில்லை; அவமதிக்கும் நோக்கில் அதை அழிக்கவும் இல்லை. என்னை சங்கராச்சாரியராக்க வேண்டாம்; சகோதரனான ஏற்றுக்கொள்ளத்தான் சொல்கிறேன். எங்களை வெறும் டீ ,பன் கொடுத்து ஏமாற்றி விடலாம் என்று கணக்கு போடாதீர்கள் ,விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 அல்லது 9 சீட் தருகிறோம் அதற்கு மேல் தரமாட்டோம் என்று கூறியவர்கள் அது உங்கள் மதிப்பீடு. எங்களை பொறுத்தவரையில் நாங்கள் 234 தொகுதிகளுக்கு இணையானவர்கள் தகுதியானவர்கள் அந்த வலிமை எங்களுக்கு உண்டு இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை வெறும் தேர்தல் கணக்கில் சொல்லவில்லை சமூக மாற்றத்தின் பார்வை அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நோக்கம் . இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர்கள் சிந்தனைசெல்வன், துரை. ரவிக்குமார், முதன்மை செயலாளர் ஏ.சி.பாவரசு, எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விருது வழங்கும் விழாவில் மாநில அமைப்பு செயலாளர் ஆர்.பன்னீர் தாஸ், வட்ட செயலாளர் சிட்டு (எ)ஆமோஸ், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் திரளாக கலந்து கொண்டனர்.