பீஜிங்: உலகிலேயே அதிகப்படியான போர்க்கப்பல்களை வைத்துள்ள நாடு சீனா. இதில் இன்னொரு படி முன்னேறும் விதமாக, அணுசக்தி மூலம் இயங்கும் விமானம் தாங்கி போர்க்கப்பலை சீனா ரகசியமாக தயாரிப்பது உறுதியாகி உள்ளது. இத்திட்டத்தை மிக ரகசியமாக சீனா செய்து வந்த நிலையில் தற்போது சாட்டிலைட் புகைப்படங்கள் மற்றும் சீன அரசு ஆவணங்கள் இதை உறுதிப்படுத்தி உள்ளன. இக்கப்பலுக்காக தரையில் பிரமாண்டமான அணு உலையை சீனா உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தற்போது உலகில் பல இடங்களில் போர்கள் நடந்து வரும் நிலையில், சீனாவின் இந்த முயற்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதன் மூலம், கடற்படையிலும் சீனா ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்படும். அணு சக்தி மூலம் இயங்குவதால் வழக்கத்திற்கு மாறான வேகத்துடன் கப்பலை இயக்கி, மிக துல்லியமாக இலக்குகளை தகர்க்க முடியும். தற்போது அணுசக்தியால் இயங்கும் நீர் மூழ்கி கப்பல்களை அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் வைத்துள்ள நிலையில், உலகின் முதல் அணுசக்தி போர்க்கப்பலை சீனா தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.