Tuesday, July 15, 2025
Home செய்திகள்Banner News அணுசக்தி நிலையங்கள், ராணுவ முகாம்களை குறிவைத்து ஈரான் மீது இஸ்ரேல் குண்டு மழை: முக்கிய தளபதிகள், அணு விஞ்ஞானிகள் பலி

அணுசக்தி நிலையங்கள், ராணுவ முகாம்களை குறிவைத்து ஈரான் மீது இஸ்ரேல் குண்டு மழை: முக்கிய தளபதிகள், அணு விஞ்ஞானிகள் பலி

by Ranjith

* 100 டிரோன்கள் மூலம் ஈரான் பதிலடி தாக்குதல், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம்

டெஹ்ரான்: ஈரானின் அணுசக்தி மையம், ராணுவத் தளங்களை குறிவைத்து ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் நேற்று சரமாரி குண்டு மழை பொழிந்தது. இதில் ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் பலியாகினர். பதிலடியாக ஈரானும் 100 டிரோன்கள் மூலம் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்து வரும் மோதலில் ஹமாஸின் முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர். இதனிடையே, ஹமாஸுக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவந்தது.

இந்த அமைப்புகளை குறிவைத்தும் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே ஈரானின் அணுசக்தி உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக அமெரிக்க அரசு கடந்த சில நாட்களாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து எந்த நேரத்திலும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் எனக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஏவுகணை உற்பத்தி தளம், அணுசக்தி நிலையங்களை குறிவைத்து நேற்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை தொடங்கியது.

ஈரானின் ராணுவ முகாம்கள் மீது கடுமையான தாக்குதலை இஸ்ரேல் பாதுகாப்புப் படை நடத்தியது. இந்த தாக்குதல் தொடர்பாக பதிவிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற ராணுவ நடவடிக்கையை ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தொடங்கியுள்ளது. ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை முற்றிலுமாக அகற்றும் வரை இந்தத் தாக்குதல்கள் தொடரும் என்று அறிவித்துள்ளார். ஈரான் தனது அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த விதிகளை மீறிவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு அமைப்பு அறிவித்த சில நாட்களிலேயே, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கான முக்கிய தளமான நடான்ஸ் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இங்கு தான் யுரேனியம் செறிவூட்டப்படுகின்றது. இங்கு செறிவூட்டப்படும் யுரேனியத்தை வைத்து தான் ஈரான் அணு குண்டு தயாரிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம் மற்றும் தெஹ்ரான் அருகே உள்ள முக்கிய ராணுவத் தளங்கள் ஆகியனவும் தாக்குதலில பலத்த சேதமடைந்தன. தாக்குதல் குறித்த வீடியோ ஒன்றையும் இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களில், ஈரானின் துணை ராணுவப் படையான புரட்சிகர பாதுகாப்புப் படையின் தலைவர் ஹொசைன் சலாமி கொல்லப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி உறுதி செய்துள்ளது. அவருடன் மற்றொரு உயர் அதிகாரி மற்றும் அணு விஞ்ஞானிகளான ஃபெரிடவுன் அப்பாஸி மற்றும் முகமது மெஹ்தி தெஹ்ரான்சி ஆகியோரும் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய தளபதிகள், ஈரானின் முக்கிய தலைவர்கள் குறிவைத்து கொல்லப்பட்டதாக தெரிகிறது.

மேலும் தலைநகர் தெஹ்ரானில் உள்ள புரட்சிகர பாதுகாப்புப் படையின் தலைமையகம் தீப்பிடித்து எரிவதாகவும், பல இடங்களில் தொடர்ந்து குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்பதாகவும் ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் டிரோன் தாக்குதல் இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து சில மணி நேரங்களில் பழிவாங்கும் நடவடிக்கையாக ஈரான் தனது டிரோன் தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கும் மேற்பட்ட டிரோன்கள் படையெடுக்க தொடங்கியது. இஸ்ரேல் எல்லைக்கு வெளியே இந்த டிரோன்களை இடைமறித்து தடுத்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானின் டிரோன் தாக்குதல்களால் இஸ்ரேலில் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.  இதனிடையே 100க்கும் மேற்பட்ட ஈரானிய டிரோன்கள் தங்களது வான்வெளியை கடந்து சென்றதாக ஈராக்கும் தெரிவித்துள்ளது. சிறிது நேரத்திற்கு பின் அண்டை நாடான ஜோர்டான், தங்களது வான்வெளியில் நுழைந்த பல ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் பிராந்தியத்திற்குள் விழக்கூடும் என்ற அச்சம் காரணமாக தங்களது விமானப்படை மற்றும் பாதுகாப்பு அமைப்புக்களால் இடைமறிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் தலைமை செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எபி டெப்ரின் கூறுகையில், ‘‘இஸ்ரேலின் சுமார் 200 போர் விமானங்கள் இதில் பங்கேற்று 100 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இதனையடுத்து இஸ்ரேலை நோக்கி ஈரான் நூற்றுக்கணக்கான டிரோன்களை ஏவியுள்ளது. இவற்றின் அச்சுறுத்தல்களை தடுப்பதற்காக பாதுகாப்பு அமைப்புக்கள் செயல்பட்டு வருகின்றன” என்றார். இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் கடும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

* அமெரிக்காவுக்கு தொடர்பில்லை
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். மேலும், ‘ஈரானுக்கு எதிரான தாக்குதலில் நாங்கள் ஈடுபடவில்லை, இஸ்ரேலின் தன்னிச்சையான முடிவு இது, அமெரிக்க படைகளையோ, பணியாளர்களையோ ஈரான் குறிவைக்கக் கூடாது’ என அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இஸ்ரேல் இன்னும் மோசமாக தாக்கும்: டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில்,‘‘ஈரான் அதன் அணுசக்தி திட்டம் குறித்து வாஷிங்டன்னுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்ட வேண்டும். இஸ்ரேலின் தாக்குதல்கள் இன்னும் மோசமாகக்கூடும்” என்று எச்சரித்துள்ளார்.

* 16 இந்திய விமானங்கள் திருப்பி விடப்பட்டன
ஈரான் மீதான தாக்குதல் எதிரொலியாக நீண்ட தூரம் செல்லும் 16 ஏர் இந்தியா விமானங்கள் நேற்று திருப்பி விடப்படடன. இஸ்ரேல் தாக்குதலினால் ஈரான் வான்வெளி மூடப்பட்டதாலும், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் சில ஏர் இந்தியா விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது என்று ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

லண்டன் ஹீத்ரோ-மும்பை விமானம் வியன்னாவிற்கும், நியூயார்க்-டெல்லி விமானம் ஷார்ஜாவிற்கும் நியூயார்க்- மும்பை விமானம் ஜெட்டாவிற்கும் திருப்பி விடப்பட்டுள்ளது. இதேபோல் மொத்தம் 16 ஏர் இந்தியா விமானங்கள் திருப்பி விடப்பட்டது. இதேபோல் இன்டிகோ விமான நிறுவனமும், ஈரான் மற்றும் அதன் அருகில் உள்ள பிராந்தியங்களில் வான்வெளி மூடப்பட்டுள்ளதால் வழித்தடங்கள் பாதிக்கப்படலாம். இது நீண்ட பயண நேரம் அல்லது ரத்து செய்யப்படலாம் என்றும் குறிப்பிட்டு இருந்தது.

* புதிய கமாண்டர்களை நியமித்த ஈரான்
இஸ்ரேல் தாக்குதலில் பலியான இரண்டு ராணுவ உயர் கமாண்டர்களுக்கு பதிலாக புதிய கமாண்டர்களை நியமித்து ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி உத்தரவிட்டுள்ளார். ஜெனரல் முகமது பகேரிக்கு பதிலாக ஜெனரல் அப்துல் ரஹீம் மவ்சவி ஆயுதப்படைகளின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெனரல் ஹொசைன் சலாமிக்கு பதிலாக காமேனி முகமது பாக்பூர் துணை ராணுவ புரட்சி கர காவல்படையை வழிநடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.

* மோடியுடன், இஸ்ரேல் பிரதமர் பேச்சு
ஈரான் மீதான தாக்குதல் குறித்து பிரதமர் மோடியை நேற்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் அழைத்து விவரித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,’ இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகுவிடம் இருந்து நேற்று தொலைபேசி அழைப்பு வந்தது. வளர்ந்து வரும் நிலைமை குறித்து அவர் எனக்கு விளக்கினார். இந்தியாவின் கவலைகளைப் பகிர்ந்து கொண்டேன், மேலும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தினேன்’என்று கூறினார்.

* இஸ்ரேலுக்கு கடும் தண்டனை ஈரான் எச்சரிக்கை
ஈரான் தலைவர் அயதுல்லா அலிகாமேனி, ‘‘இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கப்படும்’’ என்று எச்சரித்துள்ளார். இஸ்ரேல் அனைத்து சிவப்பு கோடுகளையும் தாண்டிவிட்டது. இந்த குற்றத்திற்கு பதிலடி கொடுப்பதில் வரம்புகள் இல்லை என்று ஈரான் ஆயுதப்படையும் தெரிவித்துள்ளது.

* ஏவுகணை திட்டத் தலைவர் பலி
இஸ்ரேலின் தாக்குதலில் புரட்சிகர காவல்படையின் ஏவுகணை திட்டத்தின் தலைவர் ஜெனரல் அமீர் அலி ஹஜிசாதே கொல்லப்பட்டார். இதனை ஈரானும் உறுதிப்படுத்தி உள்ளது. ஜெனரல் அமீர் அலி காவல்படையின் முக்கிய கமாண்டராக இருந்தார். மேலும் பாலிஸ்டிக் ஏவுகணை ஆயுதக் கிடங்கின் மேற்பார்வையாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

* மொசாட் ரகசிய தளம்
இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் ஈரானுக்குள் ஆழமாக ஊடுருவி விரிவான ரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மொசாட் தலைமையிலான தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் அங்கு அமைத்திருந்த ரகசிய தளத்தை செயல்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரகசிய தளத்தில் இருந்து டிரோன்கள் மூலமாக ஈரானின் வான்வெளி பாதுகாப்பு அமைப்பை சேதப்படுத்தியுள்ளன. இதன் பின்னர் இஸ்ரேல் ஏவுகணைகள் , போர் விமானங்கள் ஈரானுக்குள் எளிதாக நுழைந்து தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளன.

* 4 நாடுகளில் வான்வெளி மூடல்
இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் தொடங்கிய நிலையில், இஸ்ரேல், ஈராக், ஈரான் மற்றும் ஜோர்டான் ஆகியவை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விமானங்களுக்கும் தங்களது வான்வெளியை மூடியுள்ளன.

* இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
ஈரானின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் எச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தேவையில்லாமல் இருப்பிடத்தைவிட்டு வெளியேற வேண்டாம், உள்ளூர் அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.

* ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’
ஈரானின் அணு ஆயுதம், ஏவுகணை மற்றும் ராணுவ வளாகங்களில் தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் ஆபரேஷன் ரைசின் லயன் திட்டத்தை தொடங்கியுள்ளது. இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ‘‘எங்களது தாக்குதல் வெற்றிகரமான தொடக்கமாக உள்ளது. கடவுளின் உதவியுடன் இன்னும் பல சாதனைகளை பெறுவோம்” என்றார்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi