கொழும்பு: இலங்கை கடற்படைக்கு அணு கதிர்வீச்சு மற்றும் ரசாயனங்களை கண்டறியும் அதிநவீன கருவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது. இலங்கையின் கடற்பகுதியில் அணு கதிர்வீச்சுகள், ரசாயன அச்சுறுத்தல்களை கண்டறிந்து அவற்று பதிலளிக்கும் திறனை அதிகரிக்கும் விதமாக இலங்கை கடற்படைக்கு அதி நவீன கருவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது. கதிர்வீச்சு மற்றும் ரசாயனங்களை கண்டறியும் இந்த நவீன கருவியின் மதிப்பு ரூ.8.5 கோடி ஆகும்.
இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் கூறுகையில்,‘‘இந்த நவீன கருவிகள் அந்த நாட்டின் கடல் எல்லைகளை பாதுகாப்பதற்கும் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கும். இது இலங்கையின் பாதுகாப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், சர்வதேச கப்பல் பாதைகளையும், சமூகங்களையும் பாதுகாக்கிறது. மேலும், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் கரைகளை அடையாமல் தடுக்கிறது’’ என்றார்.