Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

என்ஆர் காங்., பாஜகவைச் சேர்ந்த 5 அமைச்சர்களுடன் முதல்வராக ரங்கசாமி நாளை பதவியேற்கிறார்

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 12 தொகுதிகளை கைப்பற்றிய என்ஆர் காங்கிரஸ் மீண்டும் பாஜக மற்றும் அதிமுக, லஜக ஆதரவுடன் கூட்டணி ஆட்சியமைக்கிறது. தேஜ கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஏற்கனவே தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அதற்கான ஆதரவு கடிதத்தையும் முதல்வரிடம் வழங்கினர். அந்த கடிதத்துடன் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்த ரங்கசாமி, ஆட்சியமைக்க அனுமதி கோரினார். அதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில், ஆட்சியமைக்க வருமாறு ரங்கசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து நேற்று கவர்னரை சந்தித்த ரங்கசாமி, புதிய அமைச்சரவை பட்டியலை அவரிடம் வழங்கினார்.

இந்த நிலையில் புதுச்சேரியில் 5வது முறையாக, முதல்வராக ரங்கசாமி நாளை (13ம்தேதி) காலை 9.45 மணிக்கு பதவியேற்றுக் கொள்கிறார். கவர்னர் மாளிகையில் நடைபெறும் விழாவில் ரங்கசாமிக்கும், 5 அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணத்தையும் கவர்னர் கைலாஷ்நாதன் செய்து வருகிறார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களாக நமச்சிவாயம் (பாஜக), மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு (என்ஆர் காங்.), காரைக்கால் ஜிஎன்எஸ் ராஜசேகரன் (பாஜக), டாக்டர் நாராயணசாமி (என்ஆர் காங்.) ஆகியோர் அடுத்தடுத்து பதவியேற்க உள்ளனர். புதிய அமைச்சரவை பட்டியல் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அனுமதி கிடைக்காத பட்சத்தில், இதில் சில மாற்றங்கள் செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்விழாவில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பாஜ மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவுக்கான பந்தல் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் கவர்னர் மாளிகையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.புதிய அமைச்சரவை பதவியேற்புக்குபின், சபாநாயகராக என்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து தேர்வு செய்யப்பட இருப்பதாகவும், துணை சபாநாயகர் பதவி பாஜகவுக்கு வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றது. கடந்த 2021ல் 6 தொகுதிகளை கைப்பற்றிய பாஜகவுக்கு 2 அமைச்சர், சபாநாயகர் பதவியை ரங்கசாமி வழங்கினார். 5வது முறையாக முதல்வராக பதவியேற்கும் ரங்கசாமி ஏற்கனவே 2001, 2006, 2011, 2021ல் முதல்வராக பதவியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.புதுச்சேரி அமைச்சரவையில் இடம்தர வேண்டுமென அதிமுக போர்க்கொடி தூக்கியிருந்த நிலையில் அக்கட்சியை மீண்டும் ரங்கசாமி கைவிரித்துள்ளதால் அதிமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.