திருவாரூர், நவ.11: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஓனான் செந்தில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை சேர்ந்தவர் பிரபல ரவுடி செந்தில் என்கின்ற ஓனான் செந்தில் (40). இவர் மீது கொலை, கொள்ளை, சிலை கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் இவர் வழக்கு ஒன்று தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி திருவாரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு மீண்டும் கார் மூலம் வலங்கைமான் சென்று கொண்டிருந்தார். அப்போது குடவாசல் அருகே மற்றொரு காரில் வந்த மர்ம கும்பல் ஒன்று ஓனான் செந்தில் காரை வழி மறித்தது.
அப்போது காரில் இருந்து தப்பிக்க முயன்ற ஒனான் செந்தில் மற்றும் அவரது வழக்கறிஞர் கும்பகோணத்தைச் சேர்ந்த அகிலன் ஆகிய இருவரையும் வெட்டியது.
இதில் சம்பவ இடத்திலேயே ஓனான் செந்தில் இறந்தார். படுகாயம் அடைந்த வழக்கறிஞர் அகிலன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் வழக்கறிஞர் அகிலன் அளித்த புகாரின் பேரில் குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து வலங்கைமானை சேர்ந்த கூழு என்கின்ற சின்னப்பா மகன் குணா என்கிற ராஜ்குமார் (32) உட்பட 18 பேர்களை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய குணா மற்றும் வலங்கைமானை சேர்ந்த முத்தையன் என்கின்ற மணிகண்டன் (36), கார்த்திகேயன் (34), ஜெயராஜ் (42) ஆகிய 4 பேர் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.