* தென் மாவட்ட ரவுடிகளுக்கு ஆயுத சப்ளையராகவும் இருந்தது விசாரணையில் அம்பலம்
சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் கடந்த 2011ம் ஆண்டு இரட்டை கொலை வழக்கில், சென்னையில் கடந்த 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரியல் எஸ்ேடட் மற்றும் ஆயுத சப்ளை செய்து வந்த ரவுடி சதாசிவம் என்பவரை சிபிசிஐடி போலீசார் நேற்று நள்ளிரவு துப்பாக்கி முனையில் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி வனத்துறை ஊழியர் ஆறுமுகம் அவரது மனைவி யோகேஸ்வரி ஆகியோர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிய போது துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக் கொலையில் கொலையில் முக்கிய குற்றவாளியாக ரவுடி சதாசிவம் செயல்பட்டதாக கூறப்படுகிறது.
அதேநேரம் பல ஆண்டுகளாக இரட்டை கொலை வழக்கில் ரவுடி சதாசிவம் போலீசாரிடம் சிக்காமல் இருந்ததால், இந்த வழக்கு சட்டம் ஒழுங்கில் இருந்து கன்னியாகுமரி மாவட்ட சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன்படி சிபிசிஐடி போலீசார் இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சதாசிவத்தை பல்வேறு கோணங்களில் தேடி வந்தனர். ஆனால் அவர் சிக்கவில்லை. இதற்கிடையே கடந்த வாரம் வாகன சோதனையின் போது பயங்கர ஆயுதங்களுடன் ரவுடிகள் பலர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கின. இது தொடர்பாக விசாரணை நடத்திய போது, பிரபல ரவுடி சதாசிவம் மூலம் ஆயுதங்கள் கொள்முதல் செய்தோம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த தகவல் கன்னியாகுமரி மாவட்ட சிபிசிஐடி போலீசாருக்கு தெரியவந்தது. உடனே ஆயுதம் விற்பனை செய்த சதாசிவம் யார் என்பது குறித்து விசாரணை நடத்திய போது, அவர் சுசீந்திரத்தில் இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சதாசிவம் என தெரியவந்தது.சதாசிவம் கடந்த 12 ஆண்டுகளாக சென்னை சாலிகிராமத்தில் ரியல் எஸ்ேடட் அதிபராக வலம் வந்ததும் தெரியவந்தது. போலீசாருக்கு எந்த வித சந்தேகம் வராதப்படி ரவுடி சதாசிவம் தன்னை பெரிய தொழிலதிபர் என்று அடையாளப்படுத்தி கொண்டு வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை தென் மாவட்ட ரவுடிகளுக்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
அதைதொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வந்த சிபிசிஐடி போலீசார் சென்னை சாலிகிராமத்தில் தொழிலதிபர் போன்று பதுங்கி இருந்த ரவுடி சதாசிவத்தை(54) என்பவனை துப்பாக்கி முனையில் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் ரவுடி சதாசிவத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிபிசிஐடி போலீசார் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இரவோடு இரவாக அழைத்து சென்றனர். இரட்டை கொலை வழக்கில் கடந்த 12 ஆண்டுகளாக சென்னையில் ரியல் எஸ்ேடட் தொழிலதிபர் போல் ரவுடி ஒருவர் பதுங்கி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.