சேலம்: ஒன்றிய பாஜ அரசை கண்டித்து அடுத்த மாதம் 12, 13, 14ம் தேதிகளில் தொடர் சாலைமறியல் போராட்டம் நடத்துவதாக சேலத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு மற்றும் மாநிலக்குழு கூட்டம், சேலத்தில் கடந்த 4 நாட்களாக நடந்தது. கடைசி நாளான நேற்று நடந்த கூட்ட அமர்வுக்கு சேலம் மாவட்ட செயலாளர் மோகன், மாநில செயற்குழு உறுப்பினர் ரவி தலைமை வகித்தனர். அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன், கட்டுப்பாட்டுக்குழு தலைவர் சுப்பராயன் எம்பி உள்ளிட்டோர் பேசினர்.
இக்கூட்டத்தில், ஒன்றிய பாஜ அரசின் மக்கள் விரோத பொருளாதார கொள்கையால் நாட்டில் விலைவாசி பன்மடங்கு உயர்ந்து மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். விலைவாசி உயர்வை கண்டிக்கும் வகையில் வரும் செப்டம்பர் 12, 13, 14ம் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு தொடர் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மறியல் போராட்டமானது, 12ம் தேதி மாவட்ட தலைநகரங்களிலும், 13ம் தேதி தாலுகாக்களிலும், 14ம் தேதி ஒன்றியங்களிலும் ஒன்றிய அரசின் அலுவலகங்கள் முன்பு நடத்தப்படவுள்ளது.
இதேபோல், தமிழ்நாட்டில் இயக்கப்படும் ரயில்களில் ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளை குறைக்கக்கூடாது. மேலும், மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுவது போல், மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி கவுன்சிலர்களுக்கும் மாத ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.