Tuesday, March 5, 2024
Home » தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் கொடி மரத்தை தாண்டி இந்து அல்லாதோர் செல்ல தடை: ஐகோர்ட் கிளை பரபரப்பு உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் கொடி மரத்தை தாண்டி இந்து அல்லாதோர் செல்ல தடை: ஐகோர்ட் கிளை பரபரப்பு உத்தரவு

by Dhanush Kumar

மதுரை: ‘தமிழகத்தில் அனைத்து இந்து கோயில்களிலும் கொடி மரத்தை தாண்டி இந்து அல்லாதோருக்கு அனுமதி இல்லை; இந்து மத நம்பிக்கையை பின்பற்றுவதாக கடிதம் கொடுப்போரை அனுமதிக்கலாம்’ என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரத்தைச் சேர்ந்த செந்தில்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பழநியில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் உள்ளது. அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947ன் படி இந்துக்கள் அல்லாத எந்த பிற சமயத்தினரும் கோயிலுக்குள் நுழைய முடியாது. தெய்வ நம்பிக்கை இல்லாதோரும், பிற மதத்தினரும் கோயிலுக்குள் வர வேண்டியதில்லை. இதன்படி பழநி கோயிலின் நுழைவாயிலில் இந்து அல்லாத நபர்கள் திருக்கோயிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு பலகை திடீரென நீக்கப்பட்டுள்ளது. இது இந்து மத நம்பிக்கை கொண்டவர்களை வேதனைப்படுத்துகிறது. தேவையற்ற சர்ச்சைகளையும் உருவாக்குகிறது. எனவே, பழநி தண்டாயுதபா்ீ சுவாமி கோயில் மற்றும் அதன் உப கோயிலுக்களின் இந்து அல்லாத பிற மதத்தினர் நுழைய தடை விதிக்க வேண்டும். அனைத்து நுழைவாயில்களிலும் இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை மீண்டும் வைக்குமாறு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, பழநி கோயிலில் இந்து அல்லாத பிற மதத்தினர் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை மீட்டு, மீண்டும் வைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், அரசு வக்கீல் ராகவேந்திரன், கோயில் தரப்பில் பரணீதரன் ஆகியோர் ஆஜராகி, ‘‘மனுதாரர் கடந்தாண்டு ஜூன் 28ல் மனு அளித்துள்ளார். அதை பரிசீலனை செய்ய ேபாதிய அவகாசமின்றி வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதும் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். சுவாமி முருகனின் மீது நம்பிக்கை கொண்டுள்ள பல்வேறு மதத்தினரும் வழிபடுகின்றனர். அரசியலமைப்பு சட்டத்தின், 25 முதல் 28வது பிரிவு வரை கூறப்படும் மதசார்பின்மையை அரசும், ேகாயில் நிர்வாகமும் பின்பற்றி வருகிறது.

இந்து சமய முறைகளின் மீது நம்பிக்கை கொண்ட யாரும் கோயிலுக்கு சென்று வழிபடலாம். பல கோயில்களில் இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கோயில் பழக்க, வழக்கத்தை ஏற்று வரும் யாரையும் தடுக்க முடியாது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வெளிநாட்டினர் ரூ.50 கட்டணம் செலுத்தி ேகாயிலுக்குள் கொடிமரம் வரை வருகின்றனர். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் வெளிநாட்டினருக்கு அனுமதி உண்டு. ஸ்ரீரங்கம் கோயிலில் முகலாய மன்னர் பரம்பரையைச் சேர்ந்த பீபீ நாச்சியார் (எ) துலுக்கநாச்சியார் சன்னதி உள்ளது. இங்கு தினசரி ரொட்டி மற்றும் வெண்ணெய் படைத்து வழிபாடு நடக்கிறது. மனுதாரர் குறிப்பிடும் விவகாரம் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்’’ என்றனர்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் கேட்கும் நிவாரணம் பழநி கோயிலுக்கு மட்டுமே பொருந்தும் என அரசுத் தரப்பு கூறுகிறது. ஆனால், இந்த விவகாரம் அனைத்து கோயில்களுக்கும் பொருந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, அரசுத் தரப்பு கோரிக்கையை ஏற்க முடியாது. அனைத்து மதங்களுக்கு இடையே சமூகத்தில் இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். எனவே, கொடி மரத்தை தாண்டி இந்து அல்லாதோருக்கு அனுமதி இல்லையென கோயில் நுழைவாயில், கொடிமரம் அருகில் மற்றும் கோயிலின் முக்கிய இடங்களில் அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும். இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாத இந்து அல்லாதோரை கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது. இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டு கோயிலுக்கு வரும் இந்து அல்லாதோரிடம் இந்து மத நம்பிக்கை மற்றும் பழக்கத்தை பின்பற்றுவேன் என சம்மத கடிதம் எழுதி வாங்கி கொண்டு அனுமதிக்கலாம்.
சம்மத கடிதம் கொடுத்து கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்ட இந்து அல்லாதோரின் விபரங்களை பதிவேடு வைத்து முறையாக பராமரிக்க வேண்டும். கோயில்களின் ஆகமவிதி மற்றும் வழக்கத்தை முறையாக பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவை அனைத்து இந்து கோயில்களிலும் பின்பற்ற சம்பந்தப்பட்டோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

16 + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi