சென்னை: சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கை போலீசார் துரிதமாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 6 மாதத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஞானசேகரனை குற்றவாளி என்று அறிவித்த சென்னை மகளிர் நீதிமன்றம், அவருக்கு 30 ஆண்டுகள், தண்டனை குறைப்பு அல்லாத ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் துரிதமாக விசாரணை நடத்தி, 6 மாதத்தில் தண்டனை பெற்றுக் கொடுத்தமைக்காக தமிழக காவல்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை, குற்றவாளி ஞானசேகரனுக்கு அந்த பகுதியில் வசித்து வந்த கோட்டூர் சண்முகம் என்பவருடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அத்துடன் அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் பிஆர்ஓவாக இருந்த நடராஜனுக்கும் தொடர்பு இருப்பது போல தெரிவித்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஆர்ஓவாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள நிலையில் அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டை நடராஜன் திட்டவட்டமாக மறுத்தார். மேலும், தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக நடராஜன் கூறியிருக்கிறார். மேலும் அண்ணாமலை இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேசியது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை உடனடியாக சமூக வலைதளங்களில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் ரூ.50 லட்சம் மான நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலை மீது சட்ட ரீதியான வழக்கு தொடர நேரிடும் என்று் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்னமும் அண்ணாமலை தரப்பில் பதிலளிக்கப்படவில்லை.
இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு ஏற்கனவே மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதில் அரசியல் தலைவர்கள் தொடர்புபடுத்தப்படுவது சர்ச்சையை மேலும் தீவிரமாக்கியுள்ளது. அண்ணாமலையின் பதிவுகள் இந்த விவகாரத்தில் உண்மைத்தன்மையை மறைத்து தவறான கருத்துகளை பரப்பியதாக நடராஜன் தரப்பு குற்றம்சாட்டுகிறது. தற்போது, அண்ணாமலை இந்த வக்கீல் நோட்டீசுக்கு எவ்வாறு பதிலளிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்பாரா அல்லது சட்டரீதியாக வழக்கை எதிர்கொள்வாரா என்பது குறித்து தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.