புதுக்கோட்டை: ஈடிக்கும் பயப்பட மாட்டோம். மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்’ என்று துணை முதல்வர் உதயநிதி கூறினார். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் அரசு திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். கலெக்டர் அருணா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை முடிந்துள்ள அரசு திட்ட பணிகள், நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது அவர், சுணக்கமாக நடைபெறும் பணிகளை கண்டறிந்து அதனை விரைவுபடுத்த அறிவுறுத்தினார். மேலும் மக்களின் மனுக்கள் மீது அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா கேட்டு வருவோரை அலைக்கழிக்காமல் உடனே தீர்வு காண வேண்டும். அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர், கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தை அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களோடு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதையடுத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி: நிதி உரிமை கேட்பதற்காகவே முதலமைச்சர் டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்றுள்ளார். இதனை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. எதிர்க்கட்சி தலைவர் அரசியல் செய்ய தான் செய்வார். ஈடி அல்ல மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம். தொடர்ந்து நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டுதான் இருப்போம். மிரட்ட பார்த்தார்கள்.
மிரட்டலுக்கு அடிபணிந்து பயப்படுவதற்கு அடிமைக் கட்சி கிடையாது திமுக. கலைஞர் உருவாக்கிய திமுக இது. சுயமரியாதை கட்சி. பெரியாரின் கொள்கை உடைய கட்சி. தப்பு செய்தவர்கள் தான் பயப்பட தேவை. நாங்கள் யாருக்கும் அடிபணிய தேவையில்லை, பயப்பட அவசியமும் கிடையாது. எதுவாக இருந்தாலும் சட்டபூர்வமாக சந்திப்போம். பாஜவின் அணிகளாக ஐடி, ஈடி உள்ளது. அவர்கள் தேர்தல் பணியை ஆரம்பித்துவிட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.