திருச்சி: திமுக கூட்டணியில் புகையும் இல்லை, புகைச்சலும் இல்லை. இங்கு மைக் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் பேசக்கூடாது என்று பவன் கல்யாணுக்கு அமைச்சர் கே.என்.நேரு எச்சரிக்கை விடுத்து உள்ளார். திருச்சியில் நேற்று அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜூலை 15ம் தேதிக்குள் பஞ்சபூர் பஸ் முனையம் இயங்க தொடங்கும். அதிமுக-பாஜ கூட்டணியை அதிமுக தொண்டர்களே ஏற்றுக் கொள்ளவில்லை. எங்கள் கூட்டணி வலுவான கூட்டணியாக உள்ளது. திமுக கூட்டணியில் புகைச்சலும் இல்லை, எங்கும் புகை எழவும் இல்லை. எங்கள் கூட்டணி சுமூகமாக இருக்கிறது.
திமுக கூட்டணியில் ஏதாவது பிரச்னை வரவேண்டும் என எதிர்க்கட்சியினர் ஆசைப்படுகின்றனர். ஆனால் அவர்களுக்குள் தான் பிரச்னை ஏற்பட்டுக்கொண்டே உள்ளது. ஆந்திர நடிகர் பவன்கல்யாண் ஆந்திராவில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் முனைப்பு காட்டட்டும். தமிழ்நாட்டில் வந்து கருத்து கூற வேண்டியதில்லை. மைக் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என பேசக்கூடாது. ஐதராபாத்தில் போய் பேசட்டும். இவ்வாறு அவர் கூறினார்.