பெங்களூரு: புகைப்பிடிக்கக தனி இடம் ஒதுக்கவில்லை என்ற புகாரின் அடிப்படையில் விராட் கோஹ்லியின் பப் உணவகம் மீது பெங்களூரு காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான ஒன்எய்ட் கம்யூன் என்ற பப்-உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட பப்-உணவகத்திற்கு எதிராக கர்நாடக காவல்துறை, புகையிலை தடுப்புச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இந்த பப்-உணவகத்தில் புகைப்பிடிப்பதற்கு தனி இடம் ஒதுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முன்னதாக பெங்களூரு காவல்துறை சார்பில், உணவகங்கள், ஓட்டல்கள், விமான நிலையங்கள் போன்ற பொது இடங்களில் புகைப்பிடிப்பு விதிகளை பரிசோதிக்க திடீர் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் போது விராட் கோலியின் பப் உணவகத்தில் புகைப்பிடிப்பவர்களுக்கு என்று தனியாக இடம் ஒதுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கர்நாடக அரசு பெங்களூருவில் ஹூக்கா பார்களுக்கு தடை விதித்தது. மேலும், புகையிலை பொருட்கள் வாங்குவதற்கான சட்டப்பூர்வ வயது 18லிருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு கர்நாடகாவின் புகையிலை பொருட்கள் தடை மற்றும் ஒழுங்குமுறைச் சட்ட திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் முர்மு சமீபத்தில் ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோஹ்லியின் பப்-உணவகத்துக்கு எதிராக ஏற்கனவே 2024 ஜூனில், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மீறி இயங்கியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே ஆண்டு டிசம்பரில், தீ பாதுகாப்பு விதிகளை மீறியதாகவும், தீ பாதுகாப்பு சான்றிதழ்கள் இல்லாததற்காகவும் பெங்களூரு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.