ஸ்டாவஞ்சர்: நார்வேயின் ஸ்டாவஞ்சர் நகரில் நார்வே கிளாசிகல் செஸ் சாம்பயன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 7வது சுற்றுப் போட்டியில் அர்ஜுன் எரிகேசியுடன், உலக செஸ் சாம்பியன் குகேஷ் மோதினார். வெள்ளை காய்களுடன் ஆடிய குகேஷ் முதல் 3 மணி நேரத்துக்கு தற்காப்பு ஆட்டத்திலேயே ஈடுபட்டார். சமயம் பார்த்து காத்திருந்த குகேஷ் தக்க வாய்ப்பு கிடைத்ததும் சரியாக பயன்படுத்தியதால், எரிகேசி தோல்வியை ஒப்புக் கொண்டு வெளியேறினார். இந்த வெற்றியை அடுத்து, குகேஷ் 11.5 புள்ளிகளுடன் 2ம் இடத்துக்கு உயர்ந்தார். அமெரிக்க வீரர் பேபியானோ கரவுனா 12.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
நடப்பு சாம்பியனும், உலக நம்பர் 1 வீரருமான மேக்னஸ் கார்ல்சன், 11 புள்ளிகளுடன் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். மகளிர் பிரிவில் சீனா வீராங்கனை ஜு வெஞ்சுன் 11.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி 10.5 புள்ளிகளுடன் 3ம் இடத்தை பிடித்துள்ளார். கொனேருவை தோற்கடித்த, உக்ரைன் வீராஙகனை அன்னா முஸிசுக் 11 புள்ளிகளுடன் 2ம் இடத்தை பிடித்தார். சீன வீராங்கனை லெய் டிஞ்ஜீ 9 புள்ளிகளும், தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி 8 புள்ளிகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.