ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சீன கிராண்ட் மாஸ்டர் வெ யியை இந்தியாவை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ் அபாரமாக ஆடி வீழ்த்தினார். நார்வேயின் ஸ்டாவஞ்சர் நகரில் நார்வே செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 9வது சுற்றுப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், சீன கிராண்ட் மாஸ்டர் வெ யி உடன் மோதினார். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய குகேஷ், 40 நகர்த்தல்களுக்கு பின் அபார வெற்றி பெற்று 3 புள்ளிகளை முழுமையாக பெற்றார்.
மற்றொரு போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் பேபியானோ கரவுனா உடன் நடந்த போட்டியில் தோல்வியின் பிடியில் இருந்து சாமர்த்தியமாக மீண்டு வந்து அபார வெற்றி பெற்றார். 9 சுற்றுகள் முடிவில் கார்ல்சன், 15 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். குகேஷ், 14.5 புள்ளிகள் பெற்று 2ம் இடத்தில் உள்ளார். கடைசி சுற்றுப் போட்டியில் குகேஷ், அமெரிக்க வீரர் கரவுனா உடன் மோதவுள்ளார். கார்ல்சன் தனது கடைசி போட்டியில், இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகேசியுடன் மோதவுள்ளார்.
இப்போட்டியில் கார்ல்சன் வென்று முழு புள்ளிகளை பெற்றால், 7வது முறையாக நார்வே செஸ் சாம்பியன் பட்டத்தை பெறும் சாதனையை நிகழ்த்துவார். குகேஷுக்கும், கார்ல்சனுக்கும் அரை புள்ளி மட்டுமே வித்தியாசம் உள்ளதால், அவருக்கும் பட்டம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பட்டியலில், அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுரா, 13 புள்ளிகள் பெற்று 3ம் இடத்தில் உள்ளார். குகேஷ், கார்ல்சன் தோற்று, நகமுரா வெல்லும் பட்சத்தில் பட்டம் வெல்லும் வாய்ப்பு அவருக்கும் கிட்டும்.
* மகளிர் பிரிவில் கொனேரு ஹம்பிக்கு இரண்டாம் இடம்
மகளிர் பிரிவில், 9 சுற்றுகள் முடிவில் உக்ரைன் வீராங்கனை அன்னா மாஸிசுக், 15.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி 13.5 புள்ளிகளுடன் 2ம் இடத்தை பிடித்துள்ளார். சீன வீராங்கனைகள் லெ டிங்ஜீ 13 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும், ஜு வென்ஜுன் 12.5 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும் உள்ளனர். தமிழக வீராங்கனை வைஷாலி, 9.5 புள்ளிகளுடன் 5ம் இடத்தை பிடித்துள்ளார்.