ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று, அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் பேபியானோ கரவுனாவை, உலக செஸ் சாம்பியன் குகேஷ் அபாரமாக வீழ்த்தினார். நார்வேயில் நார்வே செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. முதலில் நடந்த இரு போட்டிகளில் உலக நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகேசி ஆகியோரிடம் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த குகேஷ், நேற்று முன்தினம் நடந்த போட்டியில் உலகின் 2ம் நிலை வீரரான, அமெரிக்காவை சேர்ந்த ஹிகாரு நகமுராவை வெற்றி கண்டார்.
அதைத் தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த உலகின் 3ம் நிலை வீரர் பேபியானோ கரவுனாவுடன் மோதினார். இப்போட்டியின் துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய கரவுனா அதை வெற்றியாக மாற்றத் தவறினார். கடைசியில் டைபிரேக்கர் மூலம் வெற்றியை தீர்மானிக்க நடந்த போட்டியில் குகேஷ் அபார வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம், குகேஷ் 4.5 புள்ளிகள் பெற்று, மற்றொரு இந்திய வீரர் எரிகேசியுடன் சேர்ந்து 4ம் இடத்தில் உள்ளார். கார்ல்சன் 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், கரவுனா 7 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், நகமுரா 5.5 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் உள்ளனர்.