சியோல்: ரஷ்யாவில் மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வடகொரியா வீரர்களை அனுப்ப உள்ளது.உக்ரைன் ரஷ்யா போர் முடிவின்றி நீடித்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு நிதியுதவி, ராணுவ உதவிகளை அளித்து வருவதால் உக்ரைன் ரஷ்யாவுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் ரஷ்யா தரப்பில் ஏராளமான வீரர்கள் உயிரிழந்து விட்டனர். ஆனால் ரஷ்யாவுக்கு வடகொரியா வீரர்களை அனுப்பி வருகிறது. அவ்வாறு வடகொரியாவில் இருந்து ரஷ்யா சென்ற வீரர்கள் பலியாவதும் நீடிக்கிறது.
இந்த சூழலில் கடந்த 12ம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அனுப்பிய செய்தியில், “வடகொரியா ரஷ்யா உறவுகளை தொடர்ந்து முன்னெடுப்பது என் விருப்பம். வடகொரியா எப்போதும் மாஸ்கோவுடன் துணை நிற்கும். ரஷ்யாவுக்கு அசைக்க முடியாத ஆதரவை வழங்கும்” என உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட குர்ஸ்க் பிராந்தியத்தில் மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வடகொரியாவின் ராணுவ கட்டுமான தொழிலாளர்கள் ரஷ்யா செல்ல உள்ளனர். மேலும் கண்ணிவெடிகளை அகற்றும் வீரர்களை வடகொரிய அனுப்ப உள்ளது. இந்த செய்தியை ரஷ்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.