ஜோலார்பேட்டை: கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்கூர் செல்லும் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மாலை கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டது. இந்த ரயிலில் கோவையில் இருந்து சரவணகுமார், சகோதரியுடன் விஜயவாடாவுக்கு முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தார். கழிவறை அருகில் ஏராளமான வடமாநில வாலிபர்கள் ஆக்கிரமித்து அமர்ந்திருந்ததால், பெண் பயணிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில் இரவு 8 மணி அளவில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு 2வது பிளாட்பாரத்தில் ரயில் மூன்று நிமிடம் நின்று மீண்டும் புறப்பட்டது. அப்போது கழிவறை செல்ல முடியாத நிலையில் இருந்த பயணிகள் திடீரென அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். உடனடியாக ரயில்வே போலீசார் வந்து விசாரித்தபோது வட மாநில வாலிபர்கள் பற்றி கூறினர். இதையடுத்து வடமாநில பயணிகளை வெளியேற்றி பொது பெட்டிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சுமார் 15 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.