சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வடக்கு ஆந்திர-தெற்கு ஒடிசா பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேலும் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ள காரணத்தால், கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் நேற்று பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதன் காரணமாக இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
மேலும், திருநெல்வேலி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இருப்பினும், நீலகிரி மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் (14, 15ம்தேதி) ஓரிரு இடங்களில் கன மழை முதல் அதிகனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அங்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. பின்னர் 16ம் தேதியில் மேற்கண்ட நீலகிரி மற்றும் கோவை, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலை 18ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.