ஊட்டி : வடமாநில தொழிலாளர் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதித்து, உள்ளூர் தொழிலாளர்களுக்கு கட்டாயம் வேலை வழங்க தனிச்சட்டம் இயற்ற கோரி ஊட்டியில் ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு நடந்தது. தொழிலாளர் நல வாரிய முடிவுகளை வாரியமே நிறைவேற்ற தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும்.
நல வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் சட்டத்தில் உள்ளபடி இஎஸ்ஐ மருத்துவ வசதி வழங்க வேண்டும். வாரிய முடிவுபடி ஓய்வூதியம் மாதம் ரூ.2000 உடனே வழங்க வேண்டும்.
மனு செய்த அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும். வீட்டு மானியம் ரூ.4 லட்சம் என்பதை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். வீட்டு வசதி திட்டத்தை துவங்கி 3 ஆண்டுகள் கடந்தும் திட்டத்தை நிறைவேற்றாத அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேலை இடத்தில் விபத்தில் மரணமடையும், ஊனமடையும் தொழிலாளிக்கு இழப்பீட்டு சட்டப்படி முழு இழப்பீடு வழங்க வேண்டும்.
மனு செய்து 15 நாட்களில் விஏஓக்கள் சான்று வழங்கவில்லை என்றால் பதிவு மனுக்களுக்கு வாரியமே அட்டை வழங்க வேண்டும். இஎஸ்ஐ, பிஎப்.யை காரணம் காட்டி வாரிய பலன்களை மறுக்க கூடாது. வெளி மாநில தொழிலாளர் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதித்து வேலைகளை உள்ளூர் தொழிலாளர்களுக்கு கட்டாயம் வழங்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கும் இயற்கை மரண உதவி ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்.
புதுச்சேரி மாநிலம் போல நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் போனஸ் வழங்க வேண்டும். அனைத்து பண பலன்களையும் மனு செய்த 30 நாட்களில் வழங்க வேண்டும். கூடலூர் வட்டத்தில் இயங்கி வந்த நல வாரிய அலுவலகத்தை தொழிலாளர்கள் நலன் கருதி மீண்டும் கூடலூர் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் ஊட்டியில் பெருந்திரள் முறையீடு நடந்தது.
முன்னதாக, மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இருந்து தொழிலாளர் நல வாரிய அலுவலகம் வரை ஊர்வலமாக சென்ற தொழிலாளர்கள், நல வாாிய அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.