அய்சால்: ‘ஆர்எஸ்எஸ், பாஜவால் வடகிழக்கு மாநிலங்களில் மதம் மற்றும் கலாச்சாரம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது’ என மிசோரமில் ராகுல் காந்தி கூறினார். வடகிழக்கின் மிசோரம் மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெற உள்ளது. கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள இம்மாநிலத்தில் பிராந்திய கட்சிகளான ஆளும் எம்என்எப், எதிர்க்கட்சியான இசட்பிஎம் ஆகியவை ஆதிக்கம் செலுத்துகின்றன. கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் 5 தொகுதிகளை கைப்பற்றி 3ம் பிடித்தது. இந்நிலையில், மிசோரமில் 2 நாள் தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்றுள்ளார். அய்சாலில் நேற்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியாவை ஒரே சித்தாந்தம் ஆள வேண்டுமென ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. அதை நாங்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் எதிர்த்து வருகிறோம். ஆர்எஸ்எஸ், பாஜவால் வடகிழக்கு மாநிலங்களில் மதம் மற்றும் கலாச்சாரம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. இந்த தாக்குதலை அவர்கள் எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்வது முக்கியம். இங்கு ஆளும் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்), எதிர்க்கட்சியான சோரம் மக்கள் இயக்கம் (இசட்பிஎம்) ஆகியவை பாஜ, ஆர்எஸ்எஸ்சின் நுழைவுவாயில்களாக செயல்படுகின்றன. எம்என்எப் ஏற்கனவே பாஜவுடன் கூட்டணியாக இருந்துள்ளது. இசட்பிஎம் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் மவுனமாக உள்ளது. இருவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. வரவிருக்கும் தேர்தல் மிசோரம் மக்களின் சுதந்திரம், பாரம்பரியம், மதத்தை பாதுகாப்பதற்கான போராட்டமாகும். எனவே இம்முறை மிசோரமில் காங்கிரஸ் ஆட்சி அமைவதில் எந்த சந்தேகமும் இல்லை. மிசோரம் மக்கள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும். மிசோரமை ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்த வேண்டுமா இல்லை என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.
காங்கிரஸ் ஆளும் மற்ற மாநிலங்களைப் போல மிசோரமிலும் நாங்கள் முதியோருக்கு மாதம் ரூ.2,000 ஓய்வூதியம், ரூ.750க்கு காஸ் சிலிண்டர், தொழில்முனைவோருக்கு ஆதரவு தருவோம். மிசோரம் மட்டுமல்ல அடுத்து நடக்க உள்ள மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், தெலங்கானா ஆகிய 5 மாநில தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். எங்களை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது. நாட்டின் அஸ்திவாரத்தை அமைக்க காங்கிரஸ் உதவியது. அந்த அஸ்திவாரத்தை பாதுகாப்பதிலும் சாதனை படைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
* அமித்ஷா மகன் என்ன செய்கிறார்?
காங்கிரசை வாரிசு அரசியல் என பாஜ விமர்சிக்கும் நிலையில், ராகுல் அதற்கு பதிலடி தந்துள்ளார். நேற்றைய பேட்டியில் ராகுல், ‘‘ஒன்றிய அமைச்சர் அமித்ஷா மகன் என்ன செய்கிறார்? ராஜ்நாத் சிங் மகன் செய்கிறார்? அமித்ஷா மகன்தான் இந்திய கிரிக்கெட்டையே நடத்திக் கொண்டிருக்கிறார். பாரபட்சமின்றி உண்மைகளை பாருங்கள். அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பல பாஜ தலைவர்கள் அரசியல் வாரிசுகள்தான்’’ என்றார். இதற்கு பாஜ கண்டனம் தெரிவித்துள்ளது.