ஆண்டிபட்டி: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், வைகை அணையின் உறுதித்தன்மை, மதகுகளின் செயல்பாடு ஆகியவை குறித்து, பெரியாறு-வைகை வடிநீர் வட்ட நீர்வளத் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயர வைகை அணை உள்ளது. பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெறுகிறது.
அணையின் நீர்மட்டம் தற்போது 61 அடியாக உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், அணையின் உறுதித்தன்மை குறித்து பெரியாறு-வைகை வடிநீர்வட்ட நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஷாம் இர்வின் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பிரதான 7 மதகுகளில் ஒரே நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்கு முன், ஒலிக்கப்படும் அபாயச் சங்கு முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா? மதகுகளை இயக்கப் பயன்படும் மின்உபகரணங்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் முறையாக செயல்படுகிறதா என்று இயக்கி பார்த்தார்.
மேலும் அணையில் இருந்து ஆற்றுப்பகுதிக்கு தண்ணீர் திறக்கப்படும் மதகுகளையும் இயக்கி சோதனை பார்க்கப்பட்டது. அணையின் உறுதித்தன்மையை ஆய்வு செய்த பின், அணையின் கசிவு நீர் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இதையொட்டி அணையின் அனைத்து மதகுகளிலும் சுமார் 15 நிமிடங்கள் தண்ணீர் திறக்கப்பட்டு, அதன் பின் நிறுத்தப்பட்டது. ஆய்வின்போது வைகை அணை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர்கள் பரதன் பிரசாந்த் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.