சென்னை: வடகிழக்கு பருவமழையினால் ரெட்டேரி மற்றும் கொளத்தூர் பகுதிகள் பாதிக்காத வகையில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மேற்கு பகுதி உள்ள நீர் நிலைகளில் கடைசியாக சேரும் முக்கிய பகுதியாக ரெட்டேரி இருந்து வருகிறது. நிலத்தடி நீர் உயர முக்கிய ஆதாரமாக இந்த ஏரி இருந்து வருகிறது. இந்த ஏரியை சீரமைக்கும் வகையில் சுமார் 43.19 கோடி மதிப்பில் 400 ஏக்கருக்கு நீர்நிலைகளை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நீர்நிலைகளை மேம்படுத்தும் பணியை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீர்வளத்துறை தொடங்கியது. இதுவரை 80 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளதால், இந்த பருவமழையில் கூடுதல் தண்ணீரை சேமிக்க ஏரி தயாராக உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ரெட்டேரி ஏரியானது அதன் முந்தைய 32 மில்லியன் கன அடியில் இருந்து கிட்டத்தட்ட 45.13 அடியாக சேமிப்பு திறனை அதிகரிக்கும் வகையில் ஆழப்படுத்தப்பட்டுள்ளது.
11 லட்சம் கனமீட்டர் வண்டல் மண்ணை ஏரிக்கரையில் இருந்து அகற்றியுள்ளோம். பறவைகள் கூடு கட்டுவதற்காக 2 செயற்கைத் தீவுகளை உருவாக்கும் பணி முடிவடைந்து, கிட்டத்தட்ட 10,000 மரக்கன்றுகளுடன் பசுமைப்பட்டி உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி முன்கரையை பலப்படுத்துதல், நடைபாதை அமைத்தல் மற்றும் முகத்துவாரத்தில் சுற்றுச்சுவர் கட்டுதல் என அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் அந்த பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ரெட்டேரி ஏரியை குடிநீர் ஆதாரமாக முழுமையாக புத்துயிரூட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதன் காரணமாக வடகிழக்கு பருவமழை வெள்ளத்திலிருந்து ரெட்டேரி மற்றும் கொளத்தூர் பகுதிகள் பாதுகாப்பாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.