சென்னை: வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் இன்று காலை வரை இயல்பை விட 17 சதவிகிதம் குறைவாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 17ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நவம்பர் 17ம் தேதிக்கு பிறகு தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளது.
மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் இறுதி வரைக்கும் வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கி தாமதமாக நிறைவடைந்து வருகிறது.
இதன் காரணமாக வடகிழக்கு பருவமழையும் தாமதமாகவே தொடங்கியது. அக்டோபர் 1 முதல் இன்று வரை வழக்கமாக பெய்யும் மழை அளவை விட 17 சதவிகிதம் குறைவாகவே மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்.1 முதல் இன்று காலை வரை இயல்பாக 266.8 மி.மீ. பதிவாக வேண்டிய நிலையில் 221.8 மி.மீ மட்டுமே பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கியிருதாலும் ஆரம்ப காலத்தில் மழை பெரிய அளவில் பெய்யவில்லை.
இருந்த போதிலும் தென்கிழக்கு அரபிக்கடலில் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவியது. இந்த வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று மத்திய கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.