சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3வது வாரத்தில் தொடங்கும் என்றும், தென் தமிழகத்தில் குறைவாகவும், வட தமிழகத்தில் அதிகமாகவும் பெய்யும் வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை தற்போது கேரளா, கர்நாடகா, மகராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் பெய்து வரும் நிலையில் அக்டோபர் 20ம் தேதியில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் அக்டோபர் 20ம் தேதி வழக்கமாக தொடங்கும் வட கிழக்கு பருவமழை முன்னதாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக்டோபர் 3வது வாரம் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வுமையத்தின் தென்மண்டலத்தலைவர் பாலச்சந்திரன், சென்னையில் நேற்று அளித்த பேட்டி: தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்து செப்டம்பர் 30ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 39 செமீ பெய்துள்ளது.
இந்த காலகட்டத்தில் இயல்பாக மேற்கண்ட பகுதிகளில் 33 செமீ மழை பெய்யும். ஆனால் இப்போது 18 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. இந்நிலையில், பருவமழையின் அளவை கணக்கிடும் போது 19 சதவீதம் வரை கூடுதலாகவோ குறைவாக இருக்கும்பட்சத்தில் இயல்பான அளவாகவே கருதப்படும். தென் மேற்கு பருவமழையின்போது திருநெல்வேலியில் இயல்பைவிட மிக அதிகமாகவும், 17 மாவட்டங்்களில் இயல்பைவிட அதிகமாகவும், 16 மாவட்டங்களில் இயல்பாகவும், 6 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவும் மழை பெய்துள்ளது. தஞ்சை புதுக்கோட்டை நீங்கலாக டெல்டா மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாக மழை பதிவாகியுள்ளது.
தென்மேற்கு பருவமழையை பொருத்தவரையில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது தமிழகத்தில் இயல்பைவிட 14 சதவீதம் அதிகமாக மழை மழை பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் 8 சதவீதம் இயல்பாக மழை பதிவாகி இருந்தது. சென்னையில் கடந்த ஆண்டில் 74 சதவீதமும், இந்த ஆண்டு 43 சதவீதமும் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகியுள்ளது. வட கிழக்கு பருவமழையை பொருத்தவரையில் அக்டோபர் 20ம் தேதிதான் தொடங்கும். இந்த ஆண்டு அக்டோபர் 3வது வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளா, ஆந்திரா, தெற்கு கர்நாடகா, ராயலசீமா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக 112 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட கிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டில் இயல்பைவிட 63 சதவீதம் அதிகமாகவும் இருந்தது. வட கிழக்கு பருவமழையை பொருத்தவரையில் லா-நினா எ்ன்பது ஒரு முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது.
அதன்படி செப்டம்பர் மாதத்தில் பசிபிக் கடல் பகுதியில் வெப்ப அளவு இயல்பைவிட குறைந்துள்ளது. லா-நினா உருவாவதற்கு சுமார் 80 சதவீதம் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆனாலும் கடந்த 1940ல் இருந்து 2021ம் ஆண்டு வரை எடுத்துக் கொண்டால், 23 வருடங்கள் லா-நினா நிகழ்வு இயல்பாகவும், 13 வருடங்கள் இயல்பைவிட குறைவாகவும் இருந்தது. சுமார் 69 சதவீதம் இயல்பைவிட அதிகமாக இருந்துள்ளது. 31 சதவீதம் இயல்பைவிட குறைவாக இருந்துள்ளது. இந்த லா-நினாவை மட்டும் காரணமாக சொல்ல முடியாது. 2010, 2021 ஆகிய ஆண்டுகளில் லா-நினா நிகழ்வு இருந்தது.
குறிப்பாக 2010ம் ஆண்டில் 43 சதவீதம் இயல்பைவிட அதிகமாக இருந்தது. 2021ல் 63 சதவீதம் இயல்பைவிட அதிகம். ஆனால் 2016ம் ஆண்டில் லா-நினா மந்தமாக இருந்தது. அது 62 சதவீதம் இயல்பைவிட குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வட கிழக்கு பருவமழை என்பது தென்னிந்திய பகுதிகளுக்கு மட்டுமே பார்க்கப்படுவதால் இயல்பைவிட அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது. தமிழகத்தை பொருத்தவரையில் வட தமிழகப் பகுதிகளில் இயல்பைவிட அதிமாகவும், தென் தமிழகப் பகுதிகளில் இயல்பைவிட சற்று குறைவாக பெய்யவும் வாய்ப்புள்ளது.
வட கிழக்கு பருவமழை காலத்தில் புயல் போன்ற நிகழ்வுகளை முன்கூட்டியே துல்லியமாக கணிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. பொதுவாக அந்தந்த நேரத்தில் தொடர்ந்து கண்காணிக்கப்படும். தற்போதைய நிலவரப்படி வடகிழக்கு பருவமழை ெதாடர்பாக நான்கு வார காலத்துக்கான முன்னறிவிப்பை பார்க்கும் போது, அக்டோபர் 3வது வாரத்தை ஒட்டி பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதன் ெதாடர்ச்சியாக இரண்டு வாரத்துக்கு மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. தற்போது அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதத்துக்கான கணிப்புதான் தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் எவ்வளவு மழை பெய்தது என்றும் அடுத்த மாதத்துக்கான முன்னறிவிப்பும் தெரிவிக்கப்படும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். வானிலை மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மழை பாதிப்புகளை கண்காணிக்கவும், பாதிப்புகளை முன்கூட்டியே தவிர்க்கவும் வேண்டிய நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
* லா-நினா என்றால் என்ன?
பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள நீர்நிலையில் சில பகுதிகள் சூடாகவும், சில பகுதிகளில் குளர்ச்சியாகவும் இருக்கும். இது உலக வானிலையில் ஒரு சமநிலையை உருவாக்குகிறது. இந்த சமநிலையில் ஏற்படும் மாற்றங்களே எல்-நினோ மற்றும் லா-நினா என்று அழைக்கப்படுகிறது.
எல்-நனோ நிகழ்வில், பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள கடல் பரப்பில் வெப்பநிலை வழக்கத்தைவிட சூடாக இருக்கும். அதாவது குறைந்தபட்சம் 0.5 டிகிரி அதிகரிக்கும். லா-நினா என்பது அதற்கு எதிரான விளைவை ஏற்படுத்தும். கடல் பரப்பில் வெப்பநிலையை குளிரூட்டுகிறது. அதாவது, இயல்பைவிட 0.5 டிகிரி குறையும்.