சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வலுவடைந்து வருகிறது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் மண்டல வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்; வடகிழக்கு பருவமழை வலுவடைந்து வருகிறது. கடந்த 24மணிநேரத்தில் தென்தமிழகத்தில் அதிகளவிலும், வடதமிழகத்தில் சில இடங்களிலும் அதிக மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இதுவரை 12 செ.மீ. பெய்துள்ளது. 18செ.மீ. மழை பதிவாக வேண்டிய நிலையில் இதுவரை 12செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
இது இயல்பை விட குறைவாக உள்ளது. இதுவரை வடகிழக்கு பருவ மழை இயல்பை விட 40%குறைவாக பெய்துள்ளது. அக். 1 முதல் இன்று வரையிலான இயல்பு அளவு 19 செ.மீ. ஆகும். சிதம்பரத்தில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழை பெய்துள்ளது. வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வரும் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது இவ்வாறு கூறினார்.