புதுடெல்லி: அசாம், அருணாச்சல், மிசோரம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெய்யும் தொடர் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், நாடு முழுவதும் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களிலும் பல இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. அசாமின் கவுகாத்தி புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் ஏராளமான வீடுகள், குடியிருப்புக்கள் மற்றும் கட்டிடங்களை மழை நீர் சூழ்ந்துள்ளது.
கம்ரூப் பெருநகரம், கம்ரூப் மற்றும் கச்சார் மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை வெள்ளத்தில் சிக்கி மொத்தம் 10,150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் வெளியேற்றி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்காக 2 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. கவுகாத்தியின் நகர்ப்புற பகுதியில் உள்ள போண்டாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக கவுஹாத்தி விமான நிலையத்தில் விமான சேவைகள் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டது. காம்ரூப் மற்றும் காம்ரூப் பெருநகர மாவட்டங்களில் நேற்று கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அருணாச்சல்: அருணாச்சலப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதோடு ஒரு சில இடங்களில் நிலச்சரிவும் உருவானது. சுபன்சிரி மாவட்டத்தில் சுமார் 117 வீடுகள் உட்பட முக்கிய உள்கட்டமைப்புக்கள் சேதமடைந்தன. நிலச்சரிவில் சிக்கிய காய்கறி பண்ணையில் இருந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவுகிழக்கு காமெங்க் மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கிய வாகனத்தில் 2 குடும்பங்களை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். தொடர் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. மிசோரம்: மிசோரம் மாநிலத்தில் பலத்த மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் பாறைகள் உருண்டு விழுந்தன. செர்சிப் மாவட்டத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தார்.
மேலும் சுமார் 13 வீடுகள் நிலச்சரிவு மற்றும் மழையினால் சேதமடைந்தது. 20 குடும்பங்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உத்தரகாண்ட்: உத்தரகாண்டின் குப்த்காஷிக்கு அருகில் உள்ள குண்ட் அருகே கேதர்நாத் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம் சிக்கியது. இதில் ஒட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் வாகனத்தில் சிக்கிய பக்தர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர் கர்வால் மாவட்டத்தில் உள்ள லம்ப்கானில் வசிக்கும் ஓட்டுனர் ராஜேஷ் சிங் ராவத் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சிக்கிம்: சிக்கிம் மாநிலத்தில் பெய்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. 500 சுற்றுலா பயணிகள் சிக்கிக்கொண்டனர். ஒரு சுற்றுலா பயணி பலியானார். 8 பேர் மாயமாகி விட்டனர்.